ஐக்கிய நாடுகள் சபையில் ரஜினிகாந்தின் மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா நடனமாடியதற்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். நாடே பெருமை கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐநாவின் நல்லெண்ணத் தூதராக ஐஸ்வர்யா செயல்படுகிறார். அவர் ஐநா சபையின் மகளிர் தின நிகழ்ச்சியில் பரதநாட்டியம் ஆடியுள்ளார்.
ஐநா சபையில் இந்தியத் தூதரகத்தின் சார்பில் பரத நாட்டியம் ஆடிய முதல் பெண் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
தனது பரதநாட்டியக் குழுவினரோடு நடராஜர் புஷ்பாஞ்சலி, வைரமுத்து எழுதிய அவசர தாலாட்டுப் பாடல், உலக அமைதிக்காக மறைந்த இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய பாடல் ஆகியவற்றுக்கு நடனமாடினார்.
பெண்களின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் வகையிலும் இந்திய கலாசாரத்தை உலகுக்குப் பறைசாற்றும் வகையிலும் இந்த நடன நிகழ்ச்சி, இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டரில் அவர், ‘மகளிர் தினத்துக்காக நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையில் ஐஸ்வர்யா நடனமாடியதற்கு வாழ்த்துகள். இந்தியா உங்களை எண்ணி பெருமைப்படுகிறது,’ என்று கூறியுள்ளார்.
இதனிடையே ஐஸ்வர்யாவின் நடனத்தை தமிழகத்தின் முன்னணி நடனக் கலைஞர்கள் குறை கூறி விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.