நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு பாரியளவில் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது என சுகாதார அமைச்சின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதிலும் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.
2018ஆம் ஆண்டுக்கான மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான பட்டியல் இந்த ஆண்டிலேயே தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும் எனினும் தேவையான மருந்துப் பொருட்களில் 10 வீதமான மருந்துப் பொருட்களுக்கு மட்டுமே கொள்வனவுப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரச மருந்துப் பொருள் கூட்டுத்தாபனத்தினால் தேவையான மருந்து வகைகள் எவை என்பது குறித்து அறிவிக்கப்பட வேண்டும்.
எனினும் உரிய நேரத்தில் தேவையான மருந்துப் பொருட்கள் பற்றிய விபரங்கள் அனுப்பி வைக்கப்படாமையினால் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
நீரிழிவு புற்று நோய் குருதியழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சில அதிகாரிகள் வேண்டுமென்றே தேவையான மருந்துப் பொருட்கள் பற்றிய ஆவணங்களை அனுப்பி வைக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.