இந்தியாவில் 15 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் தான் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதே நகரில் Kamatipura காவல் நிலையத்தில் 48 வயதான பொலிஸ் அதிகாரி ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மனைவியும் 5 குழந்தைகளும் உள்ளனர்.
இதே பகுதியில் தாய், தந்தையை இழந்த 15 வயது சிறுமி ஒருவரும் வசித்து வந்துள்ளார். சிறுமியை அவரது மூத்த சகோதரி வளர்த்து வந்துள்ளார்.
இதை அறிந்த பொலிஸ் அதிகாரி சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். மேலும், சிறுமியை தான் திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதாக அவருடைய உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமி தங்களுக்கு சுமையாக இருப்பதால் அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால், சிறுமியும் அவரது சகோதரியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் 2-ம் திகதி வாகனத்தில் வந்த பொலிஸ் அதிகாரி சிறுமியை கட்டாயப்படுத்தி தூக்கிச் சென்றுள்ளார். இதே நகரில் உள்ள Shastripuram என்ற பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து பூட்டியுள்ளார்.
இதுமட்டுமில்லாமல், திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காத சிறுமியை அவர் தொடர்ந்து கற்பழித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது தங்கையை தூக்கிச்சென்ற பொலிஸ் அதிகாரி மீது சகோதரி புகார் அளித்துள்ளார்.
புகாரை பெற்ற பொலிசார் சிறுமியை கடத்திய பொலிஸ் அதிகாரியை கைது செய்து விசாரணை செய்தபோது அவர் அனைத்து உண்மைகளையும் தெரிவித்துள்ளார்.
தகவல்களை பெற்ற பொலிசார் உடனடியாக சென்று வீட்டில் அடைக்கப்பட்ட சிறுமியை மீட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.