Loading...
சாதாரணமாக நம்ம கிராமத்துல ஒரு பிரச்சனை வந்தா ஊரே ஒண்ணு கூடி பிரச்சனை செய்றவங்கள சமாதானப்படுத்தி ஒண்ணு சேர்த்து வைப்பாங்க இல்லைன்னா ஊரை விட்டு ஒதுக்கி வைப்பாங்க.
ஆனா இந்த சென்னை மாநகரிலே நார்த் மெட்ராஸ் ரோட்டிலே, நட்புக்காக தலையை எடுக்கவும் தயங்க மாட்டாங்க, தலையை கொடுக்கவும் தயங்க மாட்டாங்க. இந்த கருப்பு மெட்ராஸைத்தான் நமக்கு ராவாக காட்டியிருக்கிறது இந்த “மாநகரம்”.
சென்னைக்கு வேலை தேடி வருகிறார் ஸ்ரீ. வந்தவருக்கு வேலையும் கிடைத்துவிடுகிறது. சந்தோஷமாக தனது வாழ்க்கையை சென்னையை தொடங்கலாம் என முடிவெடுக்கிறார். அப்போதுதான் அந்த சம்பவம் நடக்கிறது.
யாரையோ அடிக்க வரும் ரவுடி கும்பல் ஸ்ரீயை போட்டு அடித்து துவம்சம் செய்கிறது. பையில் வைத்திருந்த சர்ட்டிபிகேட் முதல் செயின், பர்ஸ் வரை அனைத்தையும் இழந்து நிற்கிறார்.
இன்னொரு பக்கம் தவறுகளை தட்டி கேட்கும் இளைஞன். இதற்கு உதாரணமாக அரசு பேருந்தில் ஒருவருக்கு இவர் கொடுக்கும் தண்டனையை பார்க்கும்போது நமக்கே ஒரு நிமிஷம் அங்க கூசுதுன்னா பாருங்களேன்.
இதற்கிடையில் பள்ளி சிறுவனை கடத்தி பணம் பறிக்க ஒரு கும்பல் திட்டம் போடுகிறது. சீரியஸாக போகும் கதைக்குள் நம்மை குதூகலமாக சிரிக்க வைக்க வருகிறார் ராம்தாஸ். அதுவும் கதையின் திரைக்கதையிலேயே சேர்ந்து பயணம் செய்து கொண்டே. சிறுவனை மாற்றி கடத்திவிடுகிறது அந்த கும்பல். கடத்தப்பட்ட சிறுவன் சென்னையின் நம்பர் 1 கேங்ஸ்டர் என்பது தெரியவர என்ன செய்வதென்றே முழி பிதுங்கி நிற்கிறது கடத்தல் கும்பல். எப்படியும் நமக்கு சாவு உறுதி என்று தெரிந்ததும் அந்த சிறுவனை என்ன செய்தார்கள்? ஸ்ரீயின் சர்ட்டிபிகேட் என்ன ஆனது? என்பதுதான் க்ளைமேக்ஸ்..
காட்சிக்கு காட்சி விறுவிறுப்புடன் நகரும் கதையின் ஊடே, வரும் ராமதாஸின் காமெடி படத்தின் சுவாரஸ்யத்திற்கு எந்த இடையூறும் இல்லாமல் இருப்பது சிறப்பு. இவர் வரும் காட்சிகள் எல்லாம் ரசிகர்கள் கலகலப்பாகிவிடுகிறார்கள். தனி ஒரு ஆளாக இப்படத்தின் நகைச்சுவைக்கு பெரிதும் உதவியிருக்கிறார்.
இந்த படத்தோட கதையை எழுத்தில் சொல்வது கடினம்தான். ஆனால் ஒரு முறை நீங்கள் இந்த படத்தை பார்த்தால் கட்டாயம் உங்களை கவரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஒளிப்பதிவாளர் செல்வகுமார் கதைக்கு தேவையான ஒளியமைப்பை வைத்து கைதட்டல் பெறுகிறார். விறுவிறுப்பான திரைக்கதைக்கு இவருடைய கேமராவும் அழகாக கைகொடுத்திருக்கிறது.
ஜாவித் ரியாஷின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். டைட்டில் கார்டில் அனிமேஷனோடு வரும் பாடல் சிறப்பு. மற்றபடி, பிற பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது. பிலோமின் ராஜின் எடிட்டிங், கதையின் விறுவிறுப்புக்கு இடைஞ்சல் கொடுக்காமல் இருக்கிறது.
மொத்தத்தில் மாநகரம் “சும்மா தூள் கிளப்புது மாமு”…
Loading...