தமிழ் மக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தாமே வீதியில் இறங்கிப் போராட வேண்டிய நிலையில் இருக்கின்றனர். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பதற்கோ,நாடாளுமன்றத்தில் அரசுக்கு தமிழ் மக்கள் சார்பாக அழுத்தத்தைப் பதிவைச் செய்வதற்கோ தற்போதைய தமிழ் தலைமைகள் தயாராக இல்லை.
தற்போது தமிழ் தலைமைகள் என்று கூறப்படுகின்றவர்கள்,தாம் எங்கு போராட வேண்டுமோ அங்கே போராடாமல், போராடும் மக்களுடன் தாமும் நின்று கோஷங்களை எழுப்பிவிட்டுக் கலைந்து செல்கின்றனர். அல்லது ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டு தமது கடமை முடிந்தது என எண்ணுகின்றனர்.
தலைமைகள் பிரச்சினைகளை இனங்கண்டு கொள்கின்றவர்களாகவும், அந்தப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைக் காண்கின்றவர்களாகவும் இருந்தால், மக்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டிய தேவை இல்லை. தலைவர்கள் பதவிகளைப் பெற்றுக்கொண்டு அடுத்த தேர்தல்வரை பதவிச் சுகத்திற்குள் ஒளிந்து கொள்வதால், தாமே தமக்காக வீதியில் இறங்கிப் போராட வேண்டிய நிலையில் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தபோது, அவரைச் சந்திப்பதற்காக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும், வேலையற்ற பட்டதாரிகளும் வெயிலில் நின்று கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த இருதரப்பையும் ஜனாதிபதி சந்திக்கவில்லை. ஜனாதிபதி கலந்து கொள்ளும் வைபவங்களில் தாமும் கலந்து கொண்டு பிரசன்னத்தைப் பதிவு செய்வதில், யாழ்ப்பாண மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முனைப்புக் காட்டுவதையும் அவதானிக்க முடிகின்றது.
மக்கள் பிரதிநிதிகள் ஜனாதிபதியை வற்புறுத்தி மக்களைச் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தால் அதை வரவேற்கலாம். மக்கள் பிரதிநிதிகள் என்றவகையில் தமது கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாமல், நிராகரிப்பாராக இருந்தால், அந்த நிகழ்வை தாமும் நிராகரித்து வெளியெறுவதாக கூறி மக்களுக்கு ஆதரவாக செயற்பட்டிருக்க வேண்டும்.
அப்படி எதுவும் அங்கே நடைபெறவில்லை என்பது மக்களுக்கு ஏமாற்றமே. போராட்டக்காரர்கள் வீதியில் நின்று போராடிபோதும், அரசியல் தலைமைகள் ஜனாதிபதியின் நிகழ்வுகளை சிறப்பித்த திருப்தியில் அவரவர் வாகனத்தில் ஏறிச் சென்றுவிட்டனர். வெளியே மக்கள் தனது கவனத்தை ஈர்ப்பதற்காக போராடிக் கொண்டு இருக்கின்றார்கள் என்பதை ஜனாதிபதி அறியாமல், யாழ்ப்பாணத்தில் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவில்லை.
பலாலியில் இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றும்போது, பயங்கரவாதத்தை வெற்றி கொண்ட இராணுவத்தை குற்றவாளிகளாக நிறுத்தப் போவதில்லை என்று கூறியதும், ஆளுனர் மாளிகையில் ‘ஜனாதிபதியைக் கேளுங்கள்’ என்ற அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றும்போது,’பட்டதாரிகள் வீதியில் நின்று போராடாமல், இந்த அலுவலகத்திற்கு நேரடியாக வருகை தந்து தமது கோரிக்கையை முன்வைத்திருந்தால்,அவர்களில் 10 பேருக்காவது இன்றைய தினமே தனியார் துறையில் வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்திருப்பேன்’ என்று கூறியிருந்தார்.
ஜனாதிபதியின் உரைகளைப் பார்க்கும்போது, ஜனாதிபதி மக்களைச் சந்திக்க விரும்பியிருக்கவில்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது. அவ்வாறெனின், ஜனாதிபதியின் நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்த தமிழ் அரசியல் தலைமைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லையா? என்பதுதான் கேள்விக்குரியதாகும்.
தமிழ் இனத்தின் தலை எழுத்து எவ்வளவு தூரம் சிதைந்துபோய் இருக்கின்றது என்றால், தமிழ் மக்களுக்கும் அரசியல் தலைமைகளுக்குடையே பலமான உறவும் இல்லை, ஒத்துழைப்பும் இல்லை. இதேவேளை தமிழ்த் தலைமைகளிடையேயும் குறைந்தபட்ச ஒற்றுமையோ, பொது உடன்பாடோ இல்லை என்பதுதான்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நீறுபூத்த நெருப்பாக முரண்பாடுகள் இருந்து வந்த போதும்,’தமிழ்த் தேசியம்’ என்ற ஒற்றைச் சொல் இவர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தது. இப்பொது அந்த ஒற்றைச் சொல்லும் வலிமை இழந்து போய்விட்டதைப்போல் நிலைமை தீவிரமடைந்துவிட்டது.
இப்போது தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்கள் ஒரு அணியாகவும். தேசிய நல்லிணக்கம் பேசுகின்றவர்கள் ஒரு அணியாகவும் தமிழ்த் தலைமைகள் பிரிந்து கிடக்கின்றனர். உதாரணத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது இரண்டு அணியாக பிரிந்து செயற்படுகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்மந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா, சாந்தி, சிவனேசன், கோடிஸ்வரன், துரைரெட்ணசிங்கம், சரவணபவான் ஆகியோர் ஒரு அணியாகவும், செல்வம் அடைக்கலநாதன், சிறீதரன், சிவசக்தி ஆனந்தன், சித்தார்த்தன், வியாழேந்திரன், யோகேஸ்வரன், சிவமோகன், சார்ள்ஸ் ஆகியோர் ஒரு அணியாகவும் இயங்கத் தொடங்கியுள்ளனர்.
கடந்த காலத்திலும் இதுபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் உச்சமடைந்தபோதும், அதை உட்கட்சி ஜனநாயகம் என்று சம்மந்தன் பூசி மெழுகி சமாளித்தார். சமூக பிரதிநிதிகள் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தி முரண்பாட்டுக்குள்ளும் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்தினர்.
தற்போது கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டிருக்கும் முரண்பாட்டை முன்னரைப்போல் ஒரு உடன்பாட்டுக்கு கொண்டுவர முடியுமா? என்பதும்,கூட்டமைப்பிற்குள் இருக்கும் ஏனைய கட்சிகளின் இணக்கத்தைப் பெறாமல் கூட்டின் தலைமையும் அதன் சகாக்களும் தன்னிச்சையாகச் செயற்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து முன்னெப்போதும் இல்லாதவகையில், சக கட்சிகள் கொந்தளித்துப்போய் இருக்கின்றனர்.
இந்த நிலையில் வாக்குகள் பெற்று பதவிகளுக்கு வந்த தலைவர்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தருவார்கள் என்று காத்திருக்காமல், தாமே போராடுவதே சரியென்று நினைத்தே மக்கள் களத்தில் குதிக்கத் தொடங்கி விட்டார்கள். தலைமைத்துவம் இல்லாத போராட்டங்கள் திருப்தி தரும் முடிவுகளைத் தந்ததாக ஞாபகப்படுத்திக் கொள்ளும் தூரத்தில் பதிவுகள் எதுவுமில்லை.