ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளருக்கு எதிராக விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக கபீர் ஹாசீம் செயற்பட்டு வருகின்றார்.
அண்மையில் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் போது ஹாசீமின் நடவடிக்கைகள் குறித்து கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்ததாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டத்தின் போது கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கைகள் குறித்து எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக பொதுச் செயலாளரின் நடவடிக்கைகளினால் கிராமிய மட்ட கட்சியின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொகுதி அமைப்பாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க பொதுச் செயலாளர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தொகுதி அமைப்பாளர்கள் மேற்கொள்ளும் தொலைபேசி அழைப்புக்களையும் பொதுச் செயலாளர் உதாசீனம் செய்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனால் கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.