முல்லைத்தீவு கேப்பாப்பிலவில் தமது பூர்வீக கிராமத்தில் உள்ள 150 இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் காணிகளையும் விடுவிக்க கோரி நேற்று சனிக்கிழமை முதல் இருவர், சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் கடந்த முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் இதுவரை தமக்கான தீர்வுகள் எதுவும் வழங்கப்படாத நிலையிலேயே தமது போராட்டத்தினை உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றியுள்ளனர்.
கேப்பாப்பிலவு பகுதியில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவ கட்டளை தலைமையகத்தின் நுழைவாயில் அருகில் மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இராணுவத்திற்காக கேப்பாப்பிலவு பூர்வீக கிராமம் முழுவதும் சுவீகரிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் சூரிபுரம் என்னும் கிராமத்தில் குடியேற்றப்பட்டிருந்தனர்.
எனினும் தமது பூர்வீக நிலங்களில் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் எனவும், அதற்காக தமது காணிகள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.