ராகவா லாரன்ஸ், சத்யராஜ், நிக்கி கல்ராணி, கோவை சரளா ஆகியோரது நடிப்பில், இயக்குனர் சாய்ரமணி இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தில் ராகவா லாரன்ஸுக்கு கொடுக்கப்பட்ட ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ பட்டம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், ரஜினி ரசிகர்களை கோபத்திற்கும் ஆளாகியுள்ளது.
இந்நிலையில், படம் வெளியான மறுநாளே படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் சாய் ரமணியை தனது வீட்டுக்கு அழைத்து பேசியுள்ளார். ரஜினியை சந்தித்தது குறித்து இயக்குனர் சாய் ரமணி கூறும்போது, சூப்பர் ஸ்டாரின் ரசிகனான எனக்கு, சூப்பர் ஸ்டாரின் ரசிகரை வைத்து படம் இயக்கியதில் மட்டற்ற மகிழ்ச்சியில் இருந்தேன். தெரியாமல் நடந்த மக்கள் சூப்பர் ஸ்டார் டைட்டில் பிரச்சனையால் மிகவும் நான் கவலைப்பட்டிருந்தேன். இந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு எங்களை அழைத்தார்.
அப்பொழுது அவரிடம் நான் லாரன்ஸ் மாஸ்டருடன் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து பழகி வந்தேன். எனக்கு அவரின் மேல் உள்ள அன்பின் அடிப்படையிலும், மக்களுக்கு உதவி செய்துவரும் அவர். மேலும் தொடர்ந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் எனும் நல்ல எண்ணத்தின் அடிப்படையிலும்தான் அந்த டைட்டிலை வைத்தேன்.
ஆனால் அது சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் மனதை புண்படுத்திவிட்டது. அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். தப்போது சில திரையரங்குளில் மக்கள் சூப்பர் ஸ்டார் கார்டு எடுக்கப்பட்டுவிட்டது. மற்ற திரையரங்குகளிலும் எடுத்து கொண்டே வருகிறோம் என்று எனது விளக்கத்தை அவரிடம் தெரிவித்தேன்.
சூப்பர் ஸ்டார் அவர்கள் என்னையும், எனது படத்தையும் மனதார பாராட்டினார். இதுவரை லாரன்ஸின் நடிப்பையும், நடனத்தையும் பாராட்டி வந்த சூப்பர் ஸ்டார் அவர்கள் இந்த படத்தில் ஸ்டண்ட் பற்றியும் ஸ்டைல் பற்றியும் மிகவும் பாராட்டினார். மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளர் சர்வேஸ் முராரி மற்றும் இசையமைப்பாளர் அம்ரிஷ் என படத்தின் குழு அனைவரையும் பாராட்டினார். எனது அடுத்த படத்திற்கும் வாழ்த்து தெரிவித்தார். எனது வாழ்நாளில் இது மறக்கவே முடியாத ஒன்று.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.