கூட்டு எதிர்க்கட்சி தனித்து தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதால், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிட வேண்டும் என அந்த கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்று மேலும் சில சிரேஷ்ட அமைச்சர்கள் கடும் நிலைப்பாட்டில் இருந்து வருவதாக இந்த கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சிலர் கடந்த 9 ஆம் திகதி கொழும்பில் உள்ள அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடத்திய விசேட பேச்சுவார்த்தையில் இது சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.
இரண்டு தரப்பும் தனித்தனி அணியாக தேர்தலில் போட்டியிட்டால் ஐக்கிய தேசியக் கட்சிக்கே நன்மையளிக்கும் என்பதால், எப்படியாவது கூட்டு எதிர்க்கட்சியின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும் என்பது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் நிலைப்பாடாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், கூட்டு எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் எனவும் அதனை துரிதமாக செய்ய வேண்டும் எனவும் இதன் போது பேசப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் ஏற்பட்டுள்ளதால், அதனை பயன்படுத்தி கூட்டு எதிர்ககட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும் எனவும் இதன் போது கருத்து வெளியிடப்பட்டுள்ளது.