இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 70-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநில மாநாடு நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் நடந்தது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தலைமை தாங்கினார். மாநாட்டில் தி.முக. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-
அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் முதல்- அமைச்சராக இருந்தபோது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்கள். அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்கள் முதல்-அமைச்சரது உடல்நிலை குறித்து தினமும் செய்தி வெளியிட்டு வந்தனர். ஆனால் ஜெயலலிதா 75 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தபோது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு அறிக்கையாவது வெளியிட்டது உண்டா? ஏன் தமிழக அமைச்சர், தலைமை செயலாளர் அல்லது சுகாதாரத்துறை செயலாளர் யாரேனும் அறிக்கை வெளியிட்டார்களா?
தமிழகத்தில் நாடாளு மன்ற தேர்தலுக்கு முன்பாக, ஏன் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாகவே சட்டமன்ற தேர்தல் வரும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளது. பெண்கள் சிறுமிகள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்படும் அக்கிரமம் நடந்து வருகிறது. மருத்துவ கல்விக்கான நீட் நுழைவு தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ரேசன் கடைகளில் பொருட்கள் கிடைக்க வில்லை. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வில்லை. மக்கள் பிரச்சினையை கவனிக்க முடியாத இந்த ஆட்சியை அகற்ற வேண்டும். தி.மு.க. தலைமையில் புதிய ஆட்சி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.