எந்தவொரு விசாரணையையும் சந்திக்கமுடியாது என்று ஓடுபவன் முதுகெலும்புள்ளவன் எனக் கூறமுடியாது என சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
மட்டக்களப்பு- செங்கலடியில் இன்று நடந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கல்குடா தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொ.மாணிக்கவாசகம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டசபை முன்னாள் தலைவர் எஸ்.சம்பந்தமூர்த்தி ஆகியோரின் நினைவு நிகழ்வில், உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அண்மையில் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன பலாலி இராணுவத் தளத்தில் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் படைவீரர் மத்தியில் உரையாற்றியபோது போர்க்குற்ற விசாரணை நடாத்துவதற்கு அனுமதிக்கப்போவதில்லையென ஐநாவுக்குக் கூறி தனது முதுகெலும்பைக் காட்டியுள்ளதாக தெரிவித்திருந்தார்.
அது முதுகெலும்புள்ள ஒருவர் கூறுகின்ற செய்தியல்ல.
எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார் என்று சொல்பவனுக்குத் தான் முதுகெலும்பு இருக்கிறதே தவிர, எந்த விசாரணையையும் சந்திக்க முடியாது என்று ஓடுகிறவன் தனக்கு முதுகெலும்பு இருக்கிறதென்று கூற முடியாது என்று சிறிலங்கா அதிபருக்கு கூறிவைக்க விரும்புகிறேன்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.