காணி விடுவிப்பை வலியுறுத்தி இன்று இரண்டாவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கேப்பாபுலவு மக்கள் ஈடுபட்டுள்ள நிலையில் அங்கு இரண்டு வாகனங்கள் தரித்து நிற்கின்றது.
குறித்த வாகனங்களில் ஒன்று கேப்பாபுலவு மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினரின் போர் கவசவாகனம் மற்றது போராட்டத்தில் கலந்திருக்கும் பொதுமக்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அவர்களை வைத்தியசாலைக்கு அனுப்பிவைப்பதற்கான அரச நோயாளர் காவுவண்டி.
இந்த நிலையில் வாகனங்களுக்கு அருகே பொதுமக்களின் போராட்டங்கள் தொடர்கின்றது.
இராணுவ முகாமை அகற்றாவிட்டால் அங்குள்ள மக்கள் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தினை தொடர்ந்து உயிரை மாய்த்துக்கொள்வார்கள் என தெரிவித்துள்ளனர்.
உயிர் போகும் நிலையிலாவது இராணுவத்தினர் நிலங்களை விடுவித்தால் உடனடியாக நோயாளர் காவு வண்டியில் ஆபத்தான கட்டத்தில் இருப்பவர்களை வைத்திய சாலைக்கு அனுப்பி உயிர்களை காக்க முடியும் அதனால் அங்கே நோயாளர் காவு வண்டி காத்து நிற்கின்றது.
இந்த நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் வாக்குறுதிகள் எதையும் தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் தமது நிலங்களில் கால்பதிக்கும் வரை போராட்டத்தினை கைவிடப்போவதில்லை எனவும் உறுதியாக கூறுகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில் இராணுவத்தரப்பினர் பெறும் நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை நல்லாட்சி அரசு குறுகிய நாட்களுக்குள் குறுகிய நேரத்தில் கேப்பாபுலவு மக்களின் காணிகள் கையளிப்பது தொடர்பாக முடிவெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தினை அந்த மக்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும் அந்த இடத்தில் தரித்து நிற்கும் இரண்டு வாகனங்களும் அங்கிருந்து நகர்ந்தால் மட்டுமே அப்பாவி பொதுமக்களின் உயிர்களை காக்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.