பிரித்தானிய அரசாங்கம் அகதித்தஞ்சம் தொடர்பான சட்டங்களில் காலத்துக்கு காலம் பல்வேறு வகையான மாற்றங்களை அமுல்படுத்தி வருகின்றது.
அதற்கமைய அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்கள் ஐக்கிய இராச்சியத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அதற்குரிய தீர்வுகளும் அகதித் தஞ்சம் தொடர்பில் புலம்பெயர்தமிழ் அரசியல் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் வழங்கக் கூடிய பங்களிப்புகள் பற்றியும் கலந்துரையாடுவதற்காக தமிழ் தகவல் நடுவம் (TIC) ஒருசிறப்புக் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கருத்தரங்கு எதிர்வரும் 18ம் திகதி மாலை நான்கு மணி தொடக்கம் இரவு ஏழு மணி வரை, Westminster பல்கலைக்கழகத்தின் உள்ளக அரங்கில் நடைபெறும்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் தமிழ் தகவல் நடுவத்தினால் புலம்பெயர் அமைப்புக்களுக்காகன கருத்தரங்கு நடத்தப்பட்டது. அதில் அகதிகளும் புலம்பெயர்வும் என்ற அமர்வில் கலந்துரையாடப்பட்ட தரவுகளை உள்வாங்கியதாக இக்கூட்டம் அமைந்தது.
அத்துடன் கலந்துரையாடலில் தொடர் நடவடிக்கையாக மேற்கொள்ளும் ஆர்வமும், திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத் தொடரின் முதலாவது முயற்சியே இதுவாகும்.
அகதி அந்தஸ்திற்கு விண்ணப்பித்திருப்பவர்கள், விண்ணப்பிக்க இருப்பவர்கள், அவர்களின் உற்றார், உறவினர், நண்பர்கள், அகதிகள் விவகாரத்தில் செயற்படும் அமைப்புகள், சட்டத்தரணிகள் இவர்களே இக்கலந்துரையாடலின் நேரடி பயனாளிகளும் பங்காளரும் ஆவார்.
அகதிகள் விண்ணப்பம், அவர்கள் உரிமைகள் போன்ற முக்கிய விடயங்களில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களை கொண்டுவர பிரித்தானியா அரசாங்கம் முற்பட்டுவருகின்றது.
ஏற்கனவே உள்ள அடிப்படை உரிமைகள் அவற்றில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் தொடர்பான தகவல் அறிவும், விழிப்புணர்வும் விண்ணப்பதாரிகளிற்கும், அவர்கள் தொடர்பில் செயற்படுவர்களிற்கும் அவசியமாகும்.
கூட்டத்தின் அவசர முக்கியத்துவம் உணர்ந்து அக்கறையுள்ள அனைவரும் கலந்து கொண்டு கருத்துப் பரிமாறுமாறு அழைப்பு விடுக்கப்படுகின்றது.