பிரேசில் நாட்டின் ஜனாதிபதி ஆக மைக்கேல் டெமர்(73) பதவி வகிக்கிறார். இவருக்கு முன்பு ஜனாதிபதி பதவி வகித்த டில்மா ரூசோப் ஊழல் வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
எனவே அவருக்கு பதிலாக துணை ஜனாதிபதி ஆக இருந்த மைக்கேல் டெமர் ஜனாதிபதி ஆக நியமிக்கப்பட்டார். அதை தொடர்ந்து அவர் தலைநகர் பிரேசிலியாவில் ‘அல்வோரதா அரண்மனை’ எனப்படும் அதிபர் மாளிகையில் தங்கினார்.
அவருடன் மனைவி மர்சீலா (33) மற்றும் 7 வயது மகன் மைகேல் ஷின்போ ஆகியோரும் தங்கினர். இந்த நிலையில், அங்கு அவருக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது.
இரவில் அவரால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. அதே போன்ற நிலைமைதான் அவருடைய மனைவி மர்சீலாவுக்கும், மகனுக்கும் ஏற்பட்டது. எனவே அங்கு பேய் நடமாட்டம் இருப்பதாக பீதி அடைந்தார். ஆகவே அவர் ஒரு மந்திரவாதியை அழைத்து வந்து விசேஷ பூஜை நடத்தினார். இருந்தும் சகஜமான நிலை ஏற்படவில்லை.
எனவே, பீதியில் அச்சம் அடைந்த அவர் அதிபர் மாளிகையில் இருந்து குடும்பத்துடன் வெளியேறினார். இதற்கு முன்பு தாம் துணை ஜனாதிபதி ஆக இருந்த போது தங்கியிருந்த வீட்டில் குடிபுகுந்தார்.
அதிபர் மாளிகை மிகவும் ஆடம்பரமானது. பிரேசில் கட்டிட வடிவமைப்பாளர் ஆஸ்கர் நியம்யரால் கனவு மாளிகையாக உருவாக்கப்பட்டது. அங்கு மிகப்பெரிய நீச்சல் குளம், கால்பந்து மைதானம், மருத்துவ மையம், மிகப்பெரிய வராந்தா போன்றவை உள்ளன, இருந்தும் பேய் பீதியால் அங்கிருந்து ஜனாதிபதி மைக்கேல் டெமர் வெளியேறியிருப்பது அங்குள்ள அரசியல்வாதிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.