ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள இலங்கை தொடர்பான பிரேரணை நாளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஒருவேளை இன்றைய தினம் கூட பிரேரணை சமர்ப்பிக்கப்படக்கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 16ம் திகதியே முதல் பிரேரணையின் முதல் வரைபை முன்வைப்பதற்கான இறுதி தினமாக உள்ள நிலையில் இலங்கை தொடர்பான பிரேரணை இன்று அல்லது நாளை சமர்ப்பிக்கப்படலாம் என ஜெனிவாத் தகவல்கள் தெரிவித்தன.
மேலும் இலங்கை தொடர்பாக கொண்டு வரப்படவுள்ள பிரேரணையில் கலப்பு நீதிமன்றம் என்ற பரிந்துரை இல்லாவிடினும் சர்வதேச நீதிபதிகள் என்ற பரிந்துரை முன்வைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை தொடர்பாக இம்முறை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளினால் கொண்டு வரப்படவுள்ள பிரேரணையானது 2015ம் ஆண்டு பிரேரணைக்கு சமாந்தரமாகவே அமையும் என்றும் அதிலிருந்து வேறுபடாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை வளாகத்தில் நடைபெற்ற இலங்கை தொடர்பான விசேட உபகுழுக் கூட்டத்தில் இலங்கை குறித்த பிரேரணை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
அதன்போது 2015ம் ஆண்டு பிரேரணையில் எவ்விதமான மாற்றமும் செய்யப்படாது என்று அமெரிக்காவின் பிரதிநிதி குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் வெ ளியிட்ட அறிக்கையை அடியொட்டியதாக புதிய பிரேரணை அமையும் என்றும் ஜெனிவா தகவல்கள் தெரிவித்தன.
இலங்கைக்கு நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் முன்வைத்து மேலும் கால அவகாசத்தை வழங்கும் வகையிலும் இந்த பிரேரணை அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் இந்தப் பிரேரணையை எதிர்வரும் 23 ஆம்திகதி ஜெனிவாவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் ஜெனிவாவில் முகாமிட்டுள்ள தமிழர் தரப்புப் பிரதிநிதிகளும் புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது என்று தெரிவித்திருக்கின்றனர்.
இதேவேளை இலங்கை குறித்த பிரேரணை எதிர்வரும் 23ம் திகதி நிறைவேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.