100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தமிழகத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 30 கிராமங்களின் ஏரிகளை சீரமைக்கும் திட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைத்தார்.
முதலில் காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் ஏரியினை சீரமைக்கும் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும் தமிழகத்தில் வறட்சியை எதிர்கொள்வதற்கு, நீர்வள ஆதாரங்களை முகாமைத்துவம் செய்வதற்கான புதிய திட்டங்களை தமிழக அரசு ஆரம்பித்துள்ளதாகவும், இதன்மூலம் பல கிராம மக்கள் பயன்பெறுவர் எனவும் கூறப்படுகின்றது.
அத்துடன் இத்திட்டத்தில் சிறியதர வாய்க்கால் மற்றும் கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர் நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறுகட்டுமாணம் செய்தல், நீர்வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்நிகழ்வில், அமைச்சர்களான துரைக்கண்ணு, பெஞ்சமின், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், நீர்வள ஆதாரத்துறை முதன்மை தலைமை பொறியாளர் எஸ். தினகரன், மாவட்ட ஆட்சியாளர் பொன்னையா, சட்டமன்ற உறுப்பினர்களான கே.என். ராமச்சந்திரன், மரகதம் குமரவேல், பழனி எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.