இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் தண்டனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வகையிலேயே பாதுகாப்புப் படையினர் தொடர்ந்தும் செயற்படுகின்றனர் என உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வடக்கு கிழக்கில் ராணுவமயப்படுத்தப்பட்ட, அச்சுறுத்தல் மிகுந்த சூழல் காணப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் கடத்தல், சித்திரவதைகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட வன்முறைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற சம்பவங்களால் விரக்தியுற்றிருந்த மக்கள் நல்லாட்சியில் பாரிய எதிர்பார்ப்புகளை கொண்டிருந்த போதிலும், தற்போதைய அரசாங்கம் அதனை நிறைவேற்ற தவறிவிட்டதென தெரிவித்துள்ள யஸ்மின் சூக்கா, உள்ளக பொறிமுறையில் ஏற்பட்ட தோல்வியே சர்வதேச விசாரணையை நாடுவதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நிலைமாறுகால நீதிப் பொறிமுறை வெற்றியடைய வேண்டுமாயின் அதற்கு பாதிக்கப்பட்டவர்களின் ஆதரவு அவசியமென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.