களுத்துறை தெற்கு பாடசாலை ஒன்றின் மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்றியுள்ளமை தொடர்பில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து மொடலிங் கலைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, களுத்துறை தெற்கு பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து அவர்களில் இரு மாணவர்களைப் பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன் போது தாங்கள் தொடர்பு வைத்ததாக மொடலிங் கலைஞர் ஒருவரின் பெயரை இவர்கள் வெளியிட்டுள்ளனர்.
HIVஇதனையடுத்து குறித்த மொடலிங் கலைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு களுத்துறை பிரதம நீதிவான் பாரதி விஜேயரத்ன முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
களுத்துறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் பீ.கே. பெரேரா, களுத்துறை பொலிஸ் பிரிவு அத்தியட்சகர் கபில பிரேமதாச, சிறுவர், மகளிர் விவகாரப் பிரிவின் பொறுப்பதிகாரி மல்கா குமாரி ஆகியோர் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னரே குறித்த நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதேவேளை, குறித்த நபரை சிறைச்சாலையில் தனியான ஓரிடத்தில் தடுத்து வைப்பதற்கான ஏற்பாடுகளை சிறைச்சாலை வட்டாரங்கள் மேற்கொண்டிருந்தன.
பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்த இரு மாணவர்களின் பெற்றோர்களும் வெளிநாடுகளில் தொழில் செய்வதாகவும் உறவுமுறை பெண் ஒருவருடனேயே இவர்கள் வாழ்ந்து வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.