தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்ட தமது உறவுகளை கடந்த எட்டு வருட காலமாக கையளிக்க முடியாத இந்த அரசாங்கம், இன்னும் இரண்டு வருட காலத்தில் எதனை சாதிக்கப்போகின்றது என்ற நம்பிக்கையில் கால அவகாசம் வழங்குவதற்கு தமிழ் தலைமைகள் உடன்பட்டுள்ளனர் என்ற விடயம் தெரியவில்லையென காணாமல் போனோரின் உறவுகள் அங்காலாய்க்கின்றனர்.
காணாமல் போன தமது உறவுகளை கையளிக்குமாறு கோரி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், இன்று (திங்கட்கிழமை) 22ஆவது நாளை எட்டியுள்ளது. குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள விஸ்வநாதன் பாலநந்தினி என்ற பெண்மணி இக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட தாம் இன்று வீதியில் இறங்கி போராடி வரும் நிலையில், தமிழ் அரசியல்வாதிகள் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து நல்லாட்சி அரசாங்கத்திற்கு வலுசேர்த்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும், தமது பிள்ளைகளுக்காய் கண்ணீருடன் போராடிவரும் தாய்மாரின் நிலையை தமிழ் தலைமைகள் சிந்தித்து பார்த்திருந்தால் கால அவகாசம் குறித்த முடிவை எடுத்திருக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இறுதி யுத்தத்தில் ராணுவத்திடம் சரணடைந்த நிலையில் பாலநந்தினியின் கணவன் காணாமல் போயுள்ளார். இது தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.