வர்த்தகம் தொடர்பாக சீனாவுக்கு எதிராக தொடர்ந்து அறிக்கைகள் விட்டு வரும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பண மதிப்பை திரிக்கும் நாடு என சீனாவை வர்ணித்ததுடன், சீன பொருட்களுக்கு அமெரிக்காவில் 45 சதவீத வரி விதிக்கப்படும் எனவும் அச்சுறுத்தல் விடுத்து இருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் வருடாந்திர பொருளாதார கொள்கை திட்டத்தை வகுத்துள்ள டிரம்ப் நிர்வாகம் அதை பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்து உள்ளது.
உலக பொருளாதார நிறுவனத்தின் முடிவுகளை புறக்கணிப்பதே இந்த கொள்கையின் சாராம்சம் ஆகும்.
மேலும் அதிகரிக்கும் இறக்குமதியால் அமெரிக்காவின் உள்நாட்டு வர்த்தகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதை சமாளிப்பதற்கான வழிமுறைகளும் ஒருதலைப்பட்சமாக உருவாக்கப்பட்டு உள்ளன.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளுக்கு சீனா கண்டனம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து சீன வர்த்தக அமைச்சக செய்தித் தொடர்பாளர் சன் ஜிவேய் கூறுகையில்,
‘உலக பொருளாதார நிறுவனத்தின் சட்ட திட்டங்கள் மற்றும் வர்த்தக மோதல் தொடர்பான நெறிமுறைகளை ஒரு உறுப்பு நாடு தனது சொந்த நலனுக்காக புறக்கணித்தால் பன்முக வர்த்தக நுட்பம் பொருளற்றதாகி விடும். இதன் மூலம் 1930-களில் ஏற்பட்ட வணிகப்போர் மீண்டும் வெடிக்கும்’ என்று தெரிவித்தார்.