சிபிராஜ் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், கற்பனை கலந்த நகைச்சுவை கதைக் களத்தில் உருவாகி இருக்கும் ‘கட்டப்பாவ காணோம்’. இப்படம் வருகிற மார்ச் 17-ஆம் தேதி அன்று வெளியாகின்றது. அறிமுக இயக்குநர் மணி சேயோன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறும்போது,
‘கட்டப்பாவ காணோம்’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் போது தான் எனக்கு ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனவே இந்த படத்தை நான் மிகவும் அதிர்ஷ்டமான திரைப்படமாக கருதுகின்றேன். சிபிராஜ் மற்றும் இயக்குநர் மணி சேயோன் ஆகியோரோடு இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்து இருக்கின்றது.
இதில் நான் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றேன். மேலும் இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான, அதே சமயத்தில் தனித்துவமான ஒரு காட்சி இருக்கின்றது. எங்கள் காதலை பற்றி நான் கதாநாயகனின் தந்தையிடம் சொல்ல போகும் போது, நிலைமை முழுவதுமாக மாறி விடுகின்றது. நிச்சயமாக இந்த காட்சி ரசிகர்கள் அனைவரையும் கவரும் என்று உற்சாகமாக கூறினார்.
இப்படத்தை ‘விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். ‘ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் சரவணன் இப்படத்தை வெளியிடுகிறார்.