கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை நடைமுறைப்படுத்துமாறு கோரி வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்மொழிந்த பிரேரணையை, வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன் சபையில் கிழித்தெறிந்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற வடக்கு மாகாண சபையின் 88ஆவது சிறப்பு அமர்வில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரேரணையை கடந்த 86ஆவது அமர்வில் சிவாஜிலிங்கம் வடக்கு மாகாண சபையில் முன்வைத்திருந்தார். எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சி கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடியதன் பின்னர் இன்றைய தினம் பிரேரணையை எடுத்துக்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது.
இதன் பிரகாரம் சிவாஜிலிங்கம் தனது பிரேரணையை இன்றைய தினம் சபையில் முன்மொழிந்த போதிலும், அது கடந்த 86ஆவது அமர்வில் முன்வைத்த பிரேரணை அல்லவென்றும் பிரேரணை மாற்றியமைக்கப்பட்டுள்ளதென்றும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இவ்வாறு வாக்குவாதம் முற்றிய நிலையில், பிரேரணையை மாற்றியமை தவறான முன்னுதாரணம் என குற்றஞ்சாட்டிய மாகாண எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன், சிவாஜிலிங்கத்தின் பிரேரணையை சபையில் கிழித்தெறிந்துள்ளார்.