திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வடமாநிலத்தை சேர்ந்த லிங்கமநாயக்கர் என்பவர் தன்னுடைய சகோதரர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சொந்த ஊரை விட்டு புறப்பட்டு பாண்டியநாடு (மதுரை) செல்ல நினைத்து பயணத்தை தொடங்கினார்.
தொடர்ந்து நடை பயணமாக பல மைல்களை கடந்து வந்தார். வழியில் பச்சை பசுமலைக்காடுகள் சூழ்ந்த வனப்பகுதிகளை பார்த்ததும் லிங்கமநாயக்கர் மனதில் சிறு தடுமாற்றம் ஏற்பட்டது. இனி தென்திசையை நோக்கி செல்ல வேண்டாம் என்று அவருடைய மனதில் ஒரு எண்ணம் தோன்றியது.
இதனால் லிங்கமநாயக்கர் அந்த காட்டுப்பகுதியிலேயே தங்கினார். தனது அறிவுத்திறமையால் அந்த காட்டுப்பகுதியை ஒரு குட்டி நாடாக மாற்றினார். பின்னர் கோட்டை, கொத்தளங்களை அமைத்தார். மானாவாரி பயிர்களை விளைவித்தார். விளைந்த தானியங்களை ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கினார். தான் வாழும் பகுதிக்கு “இரசை” என்று பெயரிட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த திருமலை நாயக்கர், லிங்கமநாயக்கரை அழைத்து விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் “இரசை” நகரின் சிற்றரசராக லிங்கமநாயக்கர் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து இரசை நகர்ப்பகுதியை லிங்கமநாயக்கர் நீதியுடனும், நேர்மையுடனும் சிறப்பான முறையில் ஆட்சி செய்து வந்தார். அப்போது அரண்மனையின் தேவைக்கு, அங்குள்ள பண்ணையில் இருந்த பசும்பால் போதவில்லை. இதனால் பக்கத்து ஊரில் இருந்து பால் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி தினமும் ஒரு பணியாளர் பால் கறந்து, குடத்தில் கொண்டு வந்து சேர்த்தார். ஒரு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது அந்த பணியாளர் பால்குடத்தை கீழே வைத்துவிட்டு, நிழலுக்காக மரத்தடியில் ஒதுங்கி களைப்பு தீர படுத்துத்தூங்கினார். திடீரென காலில் கட்டெறும்பு கடித்ததும், கண் விழித்த அவர் பால்குடத்தை பார்த்தார்.
ஆனால் அது பால் இல்லாமல் வெற்றுக்குடமாக இருந்தது. இதே போல பல நாட்கள் அந்த மரத்தடி அருகே வரும்போது பால் மாயமாகி வந்தது. இதனால் அரண்மனையில் பசும்பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது குறித்து மன்னரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே பணியாளரை கூப்பிட்டு மன்னர் விசாரித்த போது, அரசே நீங்களே ஒருமுறை நேரில் வந்து சோதனை செய்து விட்டு, பின்னர் என்னை தண்டியுங்கள், என்று பரிவாக கெஞ்சினார்.
பணியாளரின் அந்த கோரிக்கையை பரிசீலித்த மன்னர், மீண்டும் அவரிடமே பால் நிரம்பிய குடத்தை கொடுத்து அதே மரத்தடியில் வைக்க உத்தரவிட்டார். இந்த சம்பவத்தை மன்னர், அரண்மனை பணியாளர்கள் மற்றும் சிப்பாய்கள் ஒரு மறைவான இடத்தில் நின்று பார்த்தனர். சிறிது நேரம் கழித்து மன்னரும், மற்றவர்களும் போய் அந்த பால் குடத்தை கவனித்தனர். அப்போது அனைவரும் வியப்படையும் வகையில் பால்குடம், வெறும் குடமாக காட்சி அளித்தது. இதனால் அனைவரும் திகைத்தனர். உடனே அந்த இடத்தை தோண்டிப் பார்க்க லிங்கமநாயக்கர் உத்தரவிட்டார்.
அதன்படி அந்த பகுதியை பணியாளர்கள் தோண்டும் போது திடீரென ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வானில் கருடன்கள் வட்டமிட்டன. கடப்பாரையால் ஓங்கி குத்தியபோது பூமிக்கு அடியில் இருந்து ரத்தம் பீறிட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்தது. தொடர்ந்து மண்ணை அகழ்ந்து பார்த்தபோது கையில் உடுக்கை, சூலாயுதத்துடன் அமர்ந்த நிலையில் அம்மன் சிலை இருந்ததை கண்டு லிங்கமநாயக்கர் ஆச்சரியம் அடைந்தார்.
அம்மனின் தோளில் கடப்பாரை பட்டதால் ரத்தம் வந்த அதிசயம் நிகழ்ந்ததும் தெரியவந்தது. சிறிது நேரத்தில் ரத்தம் வருவது நிற்கவே, அதே இடத்தில் அம்மன் சிலைக்கு மஞ்சள் நீராட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போது மேகம் திரண்டு பலத்த மழை (மாரி) பெய்தது. இதனால் ‘மாரி’ அம்மன் என்று அழைக்கப்பட்டு மன்னரும், மக்களும் வணங்கத்தொடங்கினார்கள். சிற்றரசன் லிங்கமநாயக்கர், மதுரையை ஆட்சி செய்யும் மீனாட்சி அம்மனின் அம்சமான மாரியம்மனுக்கு கும்பம் இல்லாமல் விமான அமைப்பில் கோவில் கட்டினான்.
‘ரத்தம் பீறிட்ட அம்மன், ரத்தம் காட்டிய அம்மன்’ என்று அழைக்கப்பட்டது நாளடைவில் மருவி ‘நத்தம் மாரியம்மன்’ என்று அழைக்கப்பட்டது. பக்தர்கள் நினைத்ததை நிறைவேற்றுவதுடன், இன்னல்களை தீர்க்கும் நத்தம் மாரியம்மனுக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். அம்மனை போற்றும்படியாக மிகச்சிறப்பாக நடைபெறும் மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.