சினிமாவுக்கு வந்த புதிதில் படங்கள் ஓடாததால் என்னை ராசி இல்லாத நடிகையாக முத்திரை குத்தி ஒதுக்கினார்கள் என்று நடிகை சுருதி ஹாசன் தெரிவித்துள்ளார். அண்மையில் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் “நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகின்றன. நடிகையான புதிதில் படங்கள் சரியாக ஓடாமல் தோல்வி அடைந்ததால் ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்தி ஒதுக்கினார்கள். 3 வருடங்கள் கஷ்டப்பட்டேன். அப்போது தெலுங்கு நடிகர் பவன்கல்யான் தனது கப்பார்சிங் படத்தில் தைரியமாக என்னை நடிக்க வைத்தார். அந்த படம் வெற்றிகரமாக ஓடியதால் எனது வாழ்க்கையே மாறியது.
தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் ஹந்தியில் ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டு இருக்கிறேன். எனது தந்தை கமல்ஹாசனுடன் சபாஷ்நாயுடு படத்தில் நடிக்கிறேன். அவருடன் நடிப்பது சுலபமானது அல்ல. படப்பிடிப்பு அரங்கில் எல்லோரும் தன்னைப்போல் உழைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். எனக்கு அவருடன் நடிக்க பயமாக இருந்தது. ஆனால் வேலை செய்ய ஆரம்பித்ததும் அவருடைய வேகம் என்னையும் தொற்றிக்கொண்டு விட்டது
எனது தந்தை உறுதியானவர். சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் தவறி விழுந்ததில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. விபத்து பாதிப்பில் இருந்து மீண்டு வர ஒரு வருடம் ஆகலாம் என்று நினைத்தேன்.
ஆனால் தனது மன உறுதி மூலம் விரைவிலேயே குணமடைந்து விட்டார். வேறு யாருக்கு இதுபோல் விபத்து ஏற்பட்டு இருந்தாலும் இவ்வளவு சீக்கிரம் குணமடைந்து இருக்க முடியாது. அவர் ஒரு முடிவு எடுத்து விட்டால் அதை சாதிக்காமல் விடமாட்டார். விரைவில் நாங்கள் சபாஷ்நாயுடு படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி அதில் நடிக்க இருக்கிறோம்.
என் அப்பாவின் அம்மாவினுடைய பெயரான ராஜலட்சுமி என்பதுதான் எனது உண்மையான பெயர். எனக்கு இசை மீது இருந்த ஆர்வத்தால் சுருதி என்று அழைத்தார்கள். பிறகு அதுவே எனது பெயராக நிலைத்து விட்டது. எதிர்காலத்தில் நிறைய இசை ஆல்பங்களை உருவாக்குவேன்.
நடிகையான பிறகு படப்பிடிப்பு நட்சத்திர விடுதிகள், விமான பயணம் என்று எனது வாழ்க்கை கழிகிறது. எனக்கு குழந்தைகளை மிகவும் பிடிக்கும். குழந்தை பெற்றுக்கொள்வதற்காகவே திருமணம் செய்து கொள்வேன்” என்றார்