பாகிஸ்தான் அணி கடந்த 2010-ம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அப்போது லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்டின்போது, பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் பட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் மொகமது ஆமீர், மொகமது ஆசிப் ஆகியோர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மூவருக்கும் ஐந்தாண்டு தடை விதிக்கப்பட்டது.
கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் அவர்களுடைய தடைக்காலம் முடிவுக்கு வந்தது. வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆமீர் ஏற்கனவே பாகிஸ்தான் சர்வதேச அணிக்கு திரும்பி விட்டார். ஆனால், மற்ற இருவரையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச அணிக்கு திரும்ப அழைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.
எப்படியாவது பாகிஸ்தான் தேசிய அணியில் இடம்பிடித்துவிட வேண்டும் என்று எண்ணிய சல்மான் பட், உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தியதோடு, அதிக அளவில் ரன்கள் குவித்து வந்தார். ஆனாலும் சல்மான் பட்டுக்கு அனுமதி வழங்க கிரிக்கெட் வாரியம் தயக்கம் காட்டியது.
இந்நிலையில் அவரது சிறப்பான ஆட்டத்தைப் பார்த்து வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவரை சேர்த்துக் கொள்ளலாமா? என்ற பரிசீலனையில் பாகிஸ்தான் தேர்வுக்குழு ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நம்பத்தகுந்த வாட்டரங்கள் வெளியிட்ட தகவலில், ‘‘தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதனால் தலைமை தேர்வுக்குழு தலைவரான இன்சமாம் உல் ஹக் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியை தேர்வு செய்வது குறித்து பயிற்சியாளரான மிக்கே ஆர்தர் உடன் விவாதித்துள்ளார். அப்போது சல்மான் பட் குறித்து அதிக அளவில் பேச்சு நடைபெற்றது’’ என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சல்மான் பட் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.