என் அத்தைக்குச் சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றம் விதித்த 100 கோடி ரூபாய் அபராதத்தை நான் கட்டுவேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
ஜெயலலிதா இறந்து விட்டதால், அவர் தண்டனையில் இருந்து விலக்குப் பெறுகிறார் என்று உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்டது! அதனால், அந்த அபராதத் தொகையை அவர் செலுத்தத் தேவையில்லை என்கின்றனர் சிலர்.
இதில் எது உண்மை? 100 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமா, அதை யார் செலுத்த வேண்டும், யாரிடம் செலுத்த வேண்டும், எவ்வளவு நாள்களுக்குள் செலுத்த வேண்டும், அதற்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டனவா? சொத்துகளை எப்போது பறிமுதல் செய்வார்கள்? இவை தொடர்பாக, சட்ட நிபுணர்களிடம் பேசினோம்.
ரூ.100 கோடியே ஒரு லட்சம் அபராதம்!
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை நான்கு ஆண்டுகள் அல்ல. நான்கு ஆண்டுகள் ஆறு மாதங்கள். அதுபோல, ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம், 100 கோடி ரூபாய் அல்ல. ரூ.100 கோடியே ஒரு லட்சம்.
பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள், அதிகார துஷ்பிரயோகம் செய்து வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த குற்றத்துக்காக, முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.
100 கோடி ரூபாய் அபராதத்தைக் கட்டத் தவறினால், ஜெயலலிதா மேலும் ஓராண்டு சிறைத் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும். மேலும், கூட்டுச் சதியில் ஈடுபட்ட குற்றத்துக்காக ஒரு லட்ச ரூபாய் அபராதமும் ஆறு மாத சிறைத்தண்டனையும் வழங்கப்படுகிறது. இந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஆறு மாதங்கள் கூடுதலாகச் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.
சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்ட மற்ற மூன்று பேருக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஓர் ஆண்டு கூடுதலாகச் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.
அதுபோல, இந்த மூன்று பேருக்கும் கூட்டுச்சதியில் ஈடுபட்ட குற்றத்துக்காகத் தனியாக 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால், ஒரு மாத சிறைத்தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றுதான் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி பார்த்தால், ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் 100 கோடியே ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் நீதிபதி குன்ஹா விதித்துள்ளார். அதுபோல சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டோருக்கு நான்கு ஆண்டுகள் ஆறு மாதங்கள் சிறையும் 10 கோடியே 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.
இதில் இ்ன்னொரு விஷயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். ‘வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்தது’ என நீதிமன்றம் பறிமுதல் செய்தும், முடக்கியும் வைத்திருக்கும், அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் அனைத்தும் அரசாங்கத்தின் கணக்கில் சேர்க்கப்பட்டு விடும். நீதிமன்றம் விதித்திருக்கும் அபராதத் தொகை, இதிலிருந்து எடுக்கப்பட மாட்டாது.
குற்றவாளிகள் நால்வரும், தாங்கள் நியாயமாகச் சம்பாதித்த பணத்திலிருந்தே இந்த அபராதத் தொகையைக் கட்ட வேண்டும். இதற்கும் தீர்ப்பில் தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார் குன்ஹா.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?
பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து, ஜெயலலிதா, சசிகலா தரப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், நான்கு பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமித்தவ ராய், பினாகி சந்திர கோஷ் அடங்கிய அமர்வு, ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் குற்றவாளிகள்தான். அதனால், கர்நாடக உயர் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு அளித்த விடுதலையை ரத்து செய்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதிசெய்கிறோம் என்று தீர்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்பில், ஜெயலலிதாதான் மிகப் பிரதானமான குற்றவாளி. ஆனால், வழக்கு நிலுவையில் இருந்த காலத்தில் அவர் இறந்து விட்டதால், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தது.
தண்டனையை நிறைவேற்ற முடியாது எனும்போது அபராதமும் கட்டத் தேவையில்லையா?’ இதுபற்றிக் கேட்டோம்.
வழக்கறிஞர் ரமேஷ், சென்னை உயர் நீதிமன்றம் :
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் இரண்டு பகுதிகளை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று, உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கவில்லை. ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவருக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றுதான் குறிப்பிட்டுள்ளது.
அதனால், ஜெயலலிதாவுக்கான தண்டனைகள் எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன என்றோ, அவை எல்லாம் ரத்தாகிவிட்டன என்றோ அர்த்தம் இல்லை. மேலும், குற்றவாளிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரண்டாவதாக, அபராதத்தைப் பொறுத்த வரை உச்ச நீதிமன்றம் எதுவும் சொல்லவில்லை. ஆனால், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை அப்படியே உறுதி செய்துள்ளது. அதனால், அந்தத் தீர்ப்பு அப்படியே அமுல்படுத்தப்படும். பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், தனது தீர்ப்பை சிறைத் தண்டனை மற்றும் அபராதத்தை மட்டும் குறிப்பிட்டு விட்டு முடித்து விடவில்லை.
மாறாக, அபராதத்தைக் கண்டிப்பாக வசூலித்தே ஆக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் நிற்காமல், அந்த அபராதத்தை எப்படி வசூலிக்க வேண்டும் என்ற வழிமுறைகளையும் விளக்கி உள்ளது.
அபராதம் செலுத்தலாமா? அல்லது, செலுத்தாமல் கூடுதலாக சிறைத் தண்டனை அனுபவித்துக் கொள்ளலாமா?’ என்று யோசிப்பதற்கான வாய்ப்பே குற்றவாளிகளுக்கு அளிக்கப்படவில்லை.
அபராதத்தைச் செலுத்தவில்லை என்றால், ஓர் ஆண்டு கூடுதல் சிறை, ஆறு மாதங்கள் சிறை’ என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பது, சட்டத்தில் உள்ள செக்ஷன்களின்படி. அது, தீர்ப்பு எழுதும்போது வழக்கமாகக் குறிப்பிடப்படுவது.
அவர் அத்துடன் நிறுத்தியிருந்தால், ‘நாங்கள் அபராதத்தைச் செலுத்த மாட்டோம்…. வேண்டுமானால் கூடுதலாக ஒரு வருடம் தண்டனை அனுபவித்துக் கொள்கிறோம்’ என்று குற்றவாளிகள் சொல்லலாம்.
ஜெயலலிதா சார்பில்கூட, ‘அபராதம் செலுத்த மாட்டோம். உங்களால் முடிந்தால், இறந்து போன ஜெயலலிதாவைக் கூடுதல் காலம் சிறையில் அடைத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லலாம்.ஆனால், நீதிபதி குன்ஹா இதற்கு வாய்ப்பே வைக்கவில்லை.
அவர் தனது தீர்ப்பில், குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகளில் உள்ள நிரந்தர வைப்புத் தொகை, சேமிப்புக் கணக்குகளில் உள்ள தொகை முழுவதையும் அபராதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தத் தொகையில் அபராதம் ஈடாகவில்லை என்றால், வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள தங்கம், வைரம், வெள்ளி நகைகளை ரிசர்வ் வங்கி அல்லது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு விற்றோ, அல்லது பொது ஏலத்தில் விற்றோ பணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். வழக்கில் இணைக்கப் பட்டுள்ள நிறுவனங்களான ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், சிக்னோரா பிசினஸ் என்டர்பிரைசஸ், லெக்ஸ் பிராப்பர்டி டெவலப்மென்ட்ஸ், மெடோவ் அக்ரோ பார்ம்ஸ், ரிவர்வே அக்ரோ புராடக்ட்ஸ் மற்றும் இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் அண்டு ஃபார்மசூட்டிகல்ஸ் நிறுவனங்களின் பெயர்களில் உள்ள அசையாச் சொத்துக்கள் அனைத்தையும் அரசாங்கம் பறிமுதல் செய்துகொள்ள வேண்டும். வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையில் வழக்குச் செலவுக்காக கர்நாடக அரசுக்கு ஐந்து கோடி ரூபாயை தமிழக அரசு கொடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இது அப்படியே நிறைவேற்றப்படும். இப்போது சசிகலா, சுதாகரன், இளவரசிகூட தங்கள் கையில் இருந்து அபராதம் செலுத்தத் தேவையில்லை. அதுபோல, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் செலுத்தத் தேவையில்லை. அபராதத்தை அரசாங்கமே எடுத்துக்கொள்ளும்.
ஒருவேளை தீபக்கோ, சசிகலாவோ தங்கள் கையில் இருந்து அபராதம் செலுத்தினாலும், அதனால் எந்தப் பயனும் இல்லை. அதைக் கழித்துக் கொண்டு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள எந்தச் சொத்துகளும் அவர்களுக்குத் திரும்பக் கிடைக்காது.
ஏனென்றால் அபராதத்துக்குப் போக மீதி உள்ள சொத்துக்களை, சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று நீதிபதி குன்ஹா சொல்லவில்லை. அபராதம் போக மீதி உள்ளவற்றை அரசாங்கம் பறிமுதல் செய்ய வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்.
கர்நாடக அரசின் சட்டத்துறை அதிகாரி:
அபராதம் நிச்சயமாக வசூல் செய்யப்படும். இதற்காக நாங்கள் ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள் என்று யாரையும் அணுகத் தேவையில்லை. வங்கிகளுக்கு நீதிமன்ற உத்தரவைத் தெரியப்படுத்தி, இவர்கள் பெயரில் உள்ள டெபாசிட் முழுவதையும் எடுத்துக் கொள்ளலாம். நகைகளையும் ஏலம் விடலாம்.
ஒருவேளை, அந்த ஏலத்தில் போதுமான தொகை கிடைக்கவில்லை என்றால், அதன்பிறகு குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 421-ன்படி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், ‘குற்றவாளிகளின் சொத்துகளை அடையாளம் கண்டு ஏலம்விடுங்கள்’ என்று மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பும். அதன்படி, அவர் சொத்துகளை அடையாளம் கண்டு ஏலம்விட்டு தொகையை அரசாங்கத்திடம் ஒப்படைப்பார்.
அபராதத் தொகை, பறிமுதல் செய்யப்படும் சொத்துகள் எல்லாம் தமிழக அரசுக்குச் சேரும். அதில் இருந்து வழக்குச் செலவை நாங்கள் பெற்றுக்கொள்வோம். இங்கு நாங்கள் தெளிவுபடுத்த விரும்புவது என்னவென்றால், நாங்கள் வழக்குச் செலவைக் கேட்டு கடிதம் எழுதினோம் என்று செய்திகள் வருகின்றன.
ஆனால், அப்படி நாங்கள் எந்தக் கடிதத்தையும் எழுதவில்லை. ஏனென்றால், குற்றவாளிகள் சீராய்வு மனுத்தாக்கல் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதற்கு மே 14-ம் தேதி கடைசி நாள். இந்த மூன்று மாத அவகாசத்துக்குள் அவர்கள் சீராய்வு மனுத்தாக்கல் செய்துவிட்டால், இந்த வழக்கு இன்னும் தொடரும்.
அந்தச் சூழ்நிலையில், நாங்கள் அபராதம் குறித்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள முடியாது. ஒருவேளை, 90 நாள்களுக்குள் அவர்கள் சீராய்வு மனுத்தாக்கல் செய்யவில்லை என்றால், அதன்பிறகு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் அபராத வசூல் மற்றும் சொத்துப் பறிமுதல் நடவடிக்கைககள் தொடங்கிவிடும்.
மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா:
அபராதத்தைச் செலுத்துவதா, வேண்டாமா? என்ற கேள்விக்கே இடமில்லை. ஜெயலலிதா இறந்து விட்டதால், அவர் சிறைத்தண்டனையில் இருந்து இயற்கையாக விலக்குப் பெற்றுள்ளார். இறந்த ஒருவரை, சிறையில் அடைப்பது சாத்தியம் இல்லை என்பதால், அவருக்கு அந்த விலக்கு கிடைத்துள்ளது.
அபராதத்துக்கு ஜெயலலிதா விலக்குப் பெற முடியாது. ஏனென்றால், அதை வசூலிக்கும் சாத்தியங்கள் நிரந்தரமானவை. நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில், அதை வசூலிக்கும் முறைகள் என்ன என்பதையும் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். அதன்படி அந்தத் தொகை வசூலிக்கப்படும்.
சுந்தர் பிச்சைமுத்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற அதிகாரி:
பொதுவாகக் குற்றவாளிகள், அபராதத்தைத் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் செலுத்தலாம், இல்லையென்றால் சிறையில் செலுத்தலாம். ஆனால், இங்கு நீதிமன்றம் தெளிவான வசூல் முறைகளைக் கொடுத்துவிட்டது. அது போதவில்லை என்றால்தான், குற்றவாளிகள் தனியாக அபராதத் தொகையைச் செலுத்த வேண்டிவரும். அதுவும்கூட அவர்கள் செலுத்தத் தேவையில்லை. அவர்கள் பெயரில் உள்ள மற்ற சொத்துகளை வருவாய் மீட்புச் சட்டம் மூலம் அரசாங்கமே பறிமுதல் செய்து செலுத்திவிடும்.
சரவணன், தி.மு.க சார்பில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்களில் ஒருவர்:
பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, ‘அரசுப் பதவியை வைத்து ஜெயலலிதா சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். அதனால், அந்தச் சொத்துகள் அரசாங்கத்துக்கே போக வேண்டும். அதனால்தான், 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவற்றை குற்றவாளிகள் செலுத்த வேண்டும் என்றே அவர் சொல்லவில்லை. ‘குற்றவாளிகளிடம் இருந்து எடுத்துக்கொள்ளுங்கள்’ என்பதுதான் குன்ஹா தீர்ப்பின் சாரம். அதனால், அரசாங்கமே இதை எடுத்துக்கொள்ளும்.
நல்லம நாயுடு, சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரி:
சொத்துக் குவிப்பு வழக்கில் கொடநாடு எஸ்டேட் உள்ளது. அதுபோல, போயஸ் கார்டன் வீட்டில் கீழ்த்தளம், வழக்கில் இணைக்கப்படவில்லை. ஆனால், அதன்பிறகு கட்டப்பட்ட மேல்தளம் மற்றும் போயஸ் கார்டன் வீட்டின் அருகில் கட்டப்பட்ட இரண்டு மாடிக் கட்டடம் ஆகியவை அந்த வழக்கில் உள்ளன. அதனால், இவற்றை எப்படி ஏலம் விடுவது என்பதை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.
ஒருவேளை ஜெயலலிதா குடும்பத்தினரோ, அ.தி.மு.க-வோ அரசாங்கம் நிர்ணயிக்கும் விலையைச் செலுத்தி அதை வாங்கிக் கொள்ளலாம். அல்லது அரசாங்கம் மொத்தமாக ஏலத்தில் விட்டு விட்டு, அதில் ஆரம்ப காலத்தில் இருந்த ஜெயலலிதாவின் வீட்டுக்கான மதிப்பை மட்டும் ஜெயலலிதாவின் வாரிசுகளிடம் ஒப்படைக்கலாம். கொடநாடு உள்ளிட்ட மற்ற சொத்துகள் அரசாங்கத்தால் அப்படியே பறிமுதல் செய்யப்பட்டு விடும். என்றார்