விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்த நால்வர், தமது நடவடிக்கையை தீவிரவாதச் செயற்பாடு என்று வகைப்படுத்தக் கூடாது என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மோதல்களின் போது ஆயுதப்படைகளின் செயற்பாடுகளை தீவிரவாதம் என்று கருத முடியும் என ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் அறிவித்துள்ளது.
லக்சம்பேர்க்கை தளமாக கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகள் தொடர்பான வழக்கு ஒன்றிலேயே இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட நால்வர், டச்சு நீதிமன்றத்தினால் தமது நிதி முடக்கப்பட்டதை எதிர்த்து இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தனர்.
மனிதாபிமான பணிகளுக்காகவே தாம் நிதி சேகரித்ததாகவும், தீவிரவாத செயற்பாடுகளுக்காக அல்ல என்றும் அவர்கள் வாதிட்டிருந்தனர்.
அத்துடன் இலங்கையில் நடந்த மோதல்களில் விடுதலைப் புலிகள் அரசு அல்லாத ஆயுதப்படையாகவே பங்கேற்றதாகவும், எந்த அனைத்துலக பிரகடனங்களையும் மீறவில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.
அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களின் படியே தாம் நிதி சேகரிப்பில் ஈடுபட்டதாகவும், எந்தவொரு ஐரோப்பிய ஒன்றிய அல்லது அனைத்துலக தீவிரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் அல்ல என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம், மோதல்களின் போது ஆயுதப்படைகளின் செயற்பாடுகளை தீவிரவாதம் என்று கருத முடியும் என அறிவித்துள்ளது.