எந்தக் கிழமையில் என்ன செய்தால் என்ன பலன் என்பது பற்றி பார்ப்போம்
ஞாயிற்றுக்கிழமை
ஞாயிற்றுக்கிழமையை லீவு நாளாக நினைக்காதீர்கள். வெளியூருக்கு, அல்லது ஏதேனும் பிக்னிக் ஸ்பாட்டுக்குப் போக திட்டமிட்டு இருக்கிறீர்களா? தாராளமாக தயக்கமின்றி போய் வாருங்கள். ஜோதிடப்படி ஞாயிற்றுக்கிழமை அதற்குரிய நாள்தான். வீட்டில், உங்கள் கடை மற்றும் தொழிற்சாலைகளில் கே.பி.வித்யாதரன்மங்களகரமான செயல்களைச் செய்யுங்கள். சூரிய பகவானின் முழு ஆசிர்வாதமும் உங்களுக்குக் கிடைக்கும்.
ஹோமங்கள், பெரிய மனிதர்களை சென்று பார்ப்பது, தானதர்மங்கள் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுங்கள். அவை வெற்றியையும் நல்ல பலனையும் தரும். புதுமனை புகுதல், புதிதாக ஒரு வேலையை ஒப்புக்கொண்டு செய்தல் போன்றவற்றை எடுத்துச் செய்யுங்கள். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் உங்களுக்கு வெற்றித்திருமகள் வீடு தேடி வந்து வாழ்த்துவாள்.
திங்கள்கிழமை
திங்கள்கிழமையைக் கண்டால், உலகத்தில் உள்ள எல்லோருக்கும் மனதளவில் கொஞ்சம் டென்ஷன்தான். ஆனால், திங்கள்கிழமைதான் பல நல்ல செயல்களுக்கு உரிய நாளாக அமைகின்றது. சிலசமயம் திங்கள்கிழமைகளில் பகல் 1.00 மணி வரை மிகவும் சுணக்கமாக எந்த வேலையும் கைகூடாமல் எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால், ஒரு மணிக்கு மேல் கிடுகிடுவென எல்லா காரியங்களும் நடக்கத்தொடங்கிவிடும்.
உங்கள் பிள்ளைகளுக்கான கல்வியைத் தொடங்குவதற்கு, பள்ளியில் சேர்ப்பதற்கு உரியநாளாக திங்கள்கிழமை திகழ்கின்றது. கோயில்களில் சுவாமிசிலையை பிரதிஷ்டை செய்ய, ஆடை, அணிகலன்கள் வாங்க, வியாபார ஒப்பந்தங்களில் கையெழுத்திட, திருமணத்துக்கு தாலி செய்யக் கொடுப்பதற்கும் திங்கள்கிழமை ஏற்ற நாள். விவசாயிகள் கிணறு தோண்டுவதற்கும், பண்ணைக்குட்டைகள் அமைப்பதற்கும் சிறப்பான நாளாக திங்கள்கிழமை திகழ்கின்றது.
செவ்வாய்க்கிழமை
திங்கள்கிழமையைத்தான் டென்ஷனுக்கு உரிய நாளாக, எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். உண்மையில் செவ்வாய்க்கிழமைதான் பலருக்கு டென்ஷனைத்தரும் நாளாகும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசுபவர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள், டப்பிங் துறையில் இருப்பவர்கள், பேச்சாளர்கள் ஆகியோருக்கு செவ்வாய்க்கிழமை அல்வா சாப்பிடுவதுபோல் இருக்கும்.
இவர்களுக்கு வெற்றி எளிதாகக் கிடைக்கும். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு டாடா சொல்லிவிடுங்கள். பெண்கள், வீடுவாசல் ஒதுக்கி, தலைமுழுகுவதற்கு ஏற்ற நாள் செவ்வாய்க்கிழமை. வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்வதாக இருந்தால் கிழக்கு திசை வெற்றியைத் தரும்.
புதன்கிழமை
‘பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காதுன்னு’ சொல்லுவாங்க. தங்க நகைகள் வாங்குபவர்களுக்கு, திருமாங்கல்யம் செய்பவர்களுக்கு ஆகச் சிறந்தது புதன்கிழமை. கடல் கடந்து கப்பற்பயணம் மேற்கொண்டு வெளிநாடு செல்லப்போகிறீர்களா? தாராளமாக பயணம் மேற்கொள்ளுங்கள் உங்கள் பயணம் நிச்சயம் வெற்றி பெறும்.
புது வீடு, வீட்டு மனை பத்திரவுப்பதிவு செய்பவர்களுக்கு, புதிதாக வாகனம் வாங்க நினைப்பவர்களுக்கு புதன்கிழமை அற்புதமான நாள். உங்கள் நண்பர்களைச் சந்தித்து உரையாடுங்கள். சந்திப்பு நிறைவாக அமையும்.விவசாயிகள் வயல்களில் விதைப்பதற்கும், இடுபொருள்களை இடுவதற்கும் மிகவும் ஏற்ற நாள். ஆண்கள் எண்ணெய் முழுக்குப் போடுவதற்கு ஏற்ற நாள்.
வியாழக்கிழமை
கோயில் குளங்களுக்குச் செல்லுதல் முக்கியமான பிரார்த்தனைகள், வழிபாடுகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றில் ஈடுபட்டால் முழுமையான பலன் கிடைக்கும். வியாழக்கிழமைகளில் மனதில் ஏதேனும் காரியங்களை நினைத்து விரதமிருக்கத்தொடங்கினால், நிச்சயம் அந்தக் காரியம் ஜெயமாக முடியும். உங்கள் குழந்தைகளை மாலையில் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு, பாட்டுகிளாஸ், நடனவகுப்பு போன்றவற்றுக்கு அனுப்ப வியாழக்கிழமை ஏற்ற நாள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், சொற்பொழிவு போன்றவற்றில் ஈடுபட்டால் நிச்சய வெற்றி கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை
உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் வெள்ளிக்கிழமை என்று சொன்னாலே மரியாதையும் உற்சாகமும் கரை புரண்டு ஓடும். காரணம், புது மனை புகுதல், திருமணம், புத்தாடைகள், அணிகலன்கள் அணிவதற்கு, மழலைச் செல்வங்களைத் தொட்டிலில் இடுவதற்கும் மிகவும் ஏற்ற நாள் வெள்ளிக்கிழமை.
புதிதாக வாகனம் வாங்குபவர்கள் இன்று வாங்கி பூஜை போடலாம். உங்கள் குடும்ப மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறவும், மருந்துகளை எடுத்துக்கொள்ளவும் வெள்ளிக்கிழமையில் செய்தால், நல்லவிதமான பலன் கிடைக்கும். விவசாயிகள் பண்ணைக்குட்டை அமைத்தல், கிணறு வெட்டுதல் போன்றவற்றைச் செய்வது நல்லது.
சனிக்கிழமை
எல்லோரும் வீக் எண்ட் ஜாலி மூடில் இருப்பீர்கள். உங்கள் செல்லப் பிராணிகளை நிறையவே கொஞ்சி மகிழ்வீர்கள். அப்படி உங்கள் செல்ல விலங்குகளை நீங்களே குளிக்கச்செய்வீர்கள். அவைகளோடு வழக்கத்தைவிட கூடுதலாக கொஞ்சம் விளையாடி மகிழ்வீர்கள். அவைகளுக்குப் பிடித்த சிறந்த உணவுகளை வழங்குவீர்கள். ‘இதுதானே உங்களின் சனிக்கிழமை பட்டியல்.?’ தாராளமாக அதையே பின்பற்றுங்கள். ஏனென்றால், ஜோதிடப்படியும் அதுதான் சரி.
இது தவிர, நீங்கள் விவசாயியாக இருந்தால், சனிக்கிழமையில் எள், பருத்தி ஆகியவற்றை விதைத்தால் அவை நல்லமுறையில் வளர்ந்து மிகுதியான பலனைத் தரும்.