நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்ட ஒருவர் அந்த படங்களை இணையதளத்தில் கசியவிட்ட பிறகே வெளி உலகத்துக்கு தெரியவந்தது. பாவனாவும், நவீனும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். கடந்த வருடம் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். ஆனால் பாவனா தந்தையும், நவீன் தாயும் அடுத்தடுத்து மரணம் அடைந்ததால் திருமணத்தை தள்ளி வைத்தனர்.
இந்த நிலையில்தான் கொச்சியில் மலையாள படப்பிடிப்பை முடித்து விட்டு திரும்பிய பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாவனா புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனால் பாவனா திருமணம் நடக்குமா என்பது கேள்விக்குறியானது. இந்த நிலையில்தான் திருமண நிச்சயதார்த்தம் திடீரென்று நடந்து முடிந்துள்ளது. நிச்சயதார்த்தம் அவரசமாக நடந்தது ஏன்? என்பது குறித்து பாவனா அளித்த பேட்டி வருமாறு:-
“நானும், நவீனும் நீண்ட காலமாக பழகி திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்தோம். நவீன் குடும்பத்தினர் சம்பிரதாயத்துக்காக என்னை பெண் பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்தனர். இருவீட்டாரும் திருமணம் பற்றி கலந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். இப்போதே மோதிரம் மாற்றிக்கொள்ளலாமே என்ற யோசனை கிளம்பியதால் அவசரமாக நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது.
நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கூட தெரியப்படுத்த முடியவில்லை. எனக்கு திருமணம் நடப்பது வரை நிச்சயதார்த்தம் நடந்ததை வெளியில் சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் நிச்சயதார்த்த படங்கள் எனக்கு தெரியாமல் வெளியாகி விட்டன. ஏராளமானோர் போனில் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். என் திருமணத்தை நடிகர்-நடிகைகள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் அழைத்து விமரிசையாக நடத்துவேன்”.
இவ்வாறு நடிகை பாவனா கூறினார்.