நான் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் என்னுடைய குடும்பத்தினருடன் இருப்பேன். ஆனால், இப்போது என்னுடைய குடும்பம் விரிவடைந்து விட்டது. மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகத் குடும்பத்தினரை என்னுடைய குடும்ப உறுப்பினர்களாக நினைக்கிறேன். என் பிறந்தநாளை அவர்களுடன் சேர்ந்து கொண்டாடி இருந்தால், இன்னமும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.
என் பிறந்தநாளையொட்டி, மகாவீர் சிங் போகத் குடும்பத்தினரிடம் இருந்து இதுவரை எந்தவொரு பரிசுப்பொருளும் வரவில்லை. அவர்கள் ஏதாவது தருவார்கள் என்று இன்னமும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
என்னுடைய தாயாரும் பிறந்தநாள் பரிசு தரவில்லை. ஆனால், ஒவ்வொரு பிறந்த நாளன்றும் செய்து தருவது போல், இந்த ஆண்டும் ‘சீக் கேபப்ஸ்’ (ஒரு வகை உணவு) செய்து கொடுத்தார். நேற்று இரவு (அதாவது நேற்று முன்தினம்) 12 மணிக்கு வழக்கம்போல், புத்தகம் படித்தேன். அதன்பின்னர், படுத்து தூங்கினேன். காலையில் எழுந்ததும் ஏராளமான வாழ்த்துகள் எனக்காக காத்திருந்தன.
என்னை பொறுத்தமட்டில், படங்களில் நான் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரத்துக்கு உண்மையாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும். சில சமயங்களில் உடல் அளவில் மாற்றம் கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்படும்.
எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ, அப்போது கடினமாக பயிற்சி மேற்கொள்வேன். வரும்காலத்திலும் இதனை பிரதிபலிப்பேன். இதனால், என்னுடைய ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். ஆனாலும், அதனை பற்றி நான் சிந்திப்பது இல்லை.
இவ்வாறு அமீர்கான் தெரிவித்தார்.
அமீர்கான் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியாகி வசூலை வாரி குவித்த ‘தங்கல்’ படம், மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.