ஆறுமுகப் பெருமானைப் போலவே ஆறுமுகங்களைக் கொண்டவள் குலசுந்தரி தேவி. இவள் சிவந்த நிறத்தை உடையவள். லட்சுமி தேவியைப் போல செந்தாமரை மலரில் வீற்றிருப்பவள். ஆறுமுகங்களைக் கொண்ட இந்த தேவியின் ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்கள் இருக்கும். தலையில் சிவபெருமானைப் போல பிறை சந்திரனை அணிந்திருப்பாள் இந்த தேவி.
பன்னிரண்டு கரங்களைக் கொண்ட இவளுக்கு, வலது கரங்களில் முறையே பவளமாலை, தாமரை, ரத்தினக் கமண்டலம், தனம் நிரப்பிய ரத்தினக் கிண்ணம், மாதுளம் பழம், ஞானமுத்திரை ஆகியவற்றையும், இடது கரங்களில் முறையே புத்தகம், செந்தாமரை, தங்க எழுத்தாணி, ரத்தின மாலை, சங்கு, வரத முத்திரை ஆகியவற்றையும் ஏந்தியிருக்கிறாள்.
குலசுந்தரி தேவி காயத்ரி :
‘ஓம் குலசுந்தர்யை வித்மஹே
காமேஸ்வர்யை தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்’
ஸ்ரீகுலசுந்தரி தேவியை அறிந்து கொள்வோம். காமேஸ்வரி என்ற பெயர் கொண்ட அந்த தேவியின் மீது தியானம் செய்வோம். நித்யாதேவியான அவள், நம்மை காத்து அருள்புரிவாள் என்பது இந்த காயத்ரி மந்திரத்தின் பொருளாகும்.
இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் வாக்கு பலிதம் உண்டாகும். செல்வம் பெருகும். பகையை வெல்லும் சக்தியைப் பெறுவீர்கள்.