இலங்கையில் சிறுபான்மையின மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுபான்மையின மக்கள் தொடர்பான பிரதிநிதி ரீட்டாக ஐசாக்கினால் ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அறிக்கையின் மீதான விவாதம் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ரீட்டா ஐசாக், இலங்கையின் அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடியிருந்ததோடு சிறுபான்மை மக்களை நேரில் சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.
இலங்கையில் சிறுபான்மையின மக்கள் யுத்தத்தின் பின்னரும் பாரிய சவால்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர் என குறிப்பிட்டிருந்த ரீட்டா ஐசாக், இவை குறித்த அறிக்கையை ஐ.நா.வில் சமர்ப்பித்திருந்த நிலையில் இன்றைய தினம் அது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இலங்கை தொடர்பாக இம்முறை மூன்று அறிக்கைகள் ஐ.நா.வில் சமர்பிக்கப்பட்டுள்ளதோடு, முதலாவது அறிக்கை கடந்த 2ஆம் திகதி விவாதிக்கப்பட்டது, இரண்டாவது அறிக்கையே இன்றைய தினம் விவாதிக்கப்படவுள்ளது.
குறித்த அறிக்கைகள் தொடர்பான தமது நிலைப்பாட்டை, ஐ.நா. ஆணையாளர் எதிர்வரும் 22ஆம் திகதி நிகழ்த்தவுள்ள இலங்கை தொடர்பான விசேட உரையில் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.