கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான இரண்டு கோடியே 90 லட்சம் ரூபா செலவில் மகிந்த ராஜபக்சவின் படம், 50 லட்சம் நாட்காட்டிகள் அச்சிடப்பட்டமை உட்பட 5 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கின் முதல் குற்றவாளியான பசில் ராஜபக்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது ஒரு லட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 5 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் சந்தேக நபரை விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சந்தேக நபருக்கு எதிரான குற்றப் பத்திரிகை இன்று கையளிக்கப்பட்டதுடன், வழக்கு விசாரணைக்கான திகதி மே மாதம் 24 ஆம் திகதி நிர்ணயிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
இந்த வழக்கில் மற்றைய குற்றவாளியாக திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கித்சிறி ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு இதற்கு முன்னர் பிணை வழங்கப்பட்டது.