அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த 2005ஆம் ஆண்டு அரசுக்கு செலுத்திய வருமானவரி விபரங்களை இரண்டு பக்கங்கள் கொண்ட அறிக்கையாக அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையின் பிரகாரம், கடந்த 2005ஆம் ஆண்டு 150 மில்லியன் டொலர்களுக்கும் மேலான தனது வருமானத்தின் மீது கூடுதல் வருமான வரியாக 38 மில்லியன் டொலர்களையும், மத்திய வருமான வரியாக 5.3 மில்லியன் டொலர்களையும் ட்ரம்ப் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின் வரிமான வரி விபரங்களின் ஒருபகுதியாக அமைந்திருந்த குறித்த அறிக்கையில் அவரது வருமான விபரங்கள் எவையும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில், ட்ரம்பின் வருமானவரி விபரங்களை தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ளமை சட்டவிரோதமானது என வெள்ளைமாளிகை அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறிருக்க, மேற்படி விபரங்கள் அடங்கிய அறிக்கை பெயர் குறிப்பிடப்படாத நபரிடமிருந்து தபால் மூலம் தமக்கு கிடைத்ததாக தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.