ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை அமுலாக்குவதற்காக இலங்கை அரசுக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்படவுள்ளமை தெரிந்த விடயமே.
இலங்கை அரசுக்கு இரண்டு வருட கால அவகாசத்தை வழங்குவதற்கு கூட்டமைப்பின் தலைமை தனது சம்மதத்தை இலங்கை அரசுக்கும் அதனூடாக ஐ.நாவுக்கும் தெரிவித்து விட்டது.
போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளே கால அவகாசம் வழங்குவதற்கு உடன்படும் போது அதனை ஏதாவது நாடு எதிர்க்குமாயின் அந்த நாட்டுக்குப் பிடித்து விட்டது என்றே மற்றவர்கள் விமர்சிப்பர்.
போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களே கால அவகாசத்துக்கு ஆம் என்ற பிறகு கால அவகாசம் வழங்க வேண்டாம் என்று யார்தான் வலியுறுத்தப் போகின்றனர்.
ஆகவே நடைபெற்று வரும் ஜெனிவாக் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்படும் என்பதுடன் எந்தவிதமான நிபந்தனைகளும் விதிக்கப்பட மாட்டாது என்பது சர்வ நிச்சயம்.
ஐ.நாவின் தீர்மானங்களை அமுலாக்க ஆறு மாத கால அவகாசம் தரப்படும் என ஜெனிவாவில் அறிவிக்கப்படுமாயின், கடுமையான நிபந்தனைகளும் இறுக்கமான விதப்புரைகளும் இலங்கை அரசுக்குக் கிடைத்திருக்கும்.
ஆனால் கால அவகாசம் என்பது இரண்டு வருடங்கள். தான் எடுத்த தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசத்தை ஐ.நா வழங்குமாயின், அதன் பொருள் ஏற்கெனவே ஐ.நா சபை இலங்கை அரசுக்கு விதித்த நிபந்தனைகள் – தீர்மானங் கள் மிகவும் கடினமானவை. அவற்றை உடனடியாக அமுல்படுத்த முடியாது.இதன் காரணமாகத்தான் மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுகிறது என்பதாகப் பொருள்படும்.
ஆக, இலங்கை அரசுக்கு இரண்டு வருட கால அவகாசத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வழங்கும் போது எந்தவிதமான நிபந்தனைகளையும் கடுமையான எச்சரிக்கைகளையும் ஐ.நா கூட்டத்தொடர் வழங்காது என்பது உறுதியாகிறது.
இதைவிடுத்து இலங்கை அரசுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டே கால அவகாசம் வழங்கப்படும் என்று வெளிவரும் செய்திகள் தமிழ் மக்களை ஏமாற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் காப்பாற்றும் தந்திரமேயன்றி வேறில்லை.
இது ஒருபுறமிருக்க, 2015 இல் இலங்கை அரசுக்கு விதிக்கப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் மேலும் இரண்டு ஆண்டு கால அவகாசத்தை வழங்குவதாக இருந்தால்,2018ல் நடைபெறும் ஜெனிவாக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான எந்த விடயமும் கதைபட முடியாதென்பதே நிஜம்.
ஆக, 2019ல் கூடுகின்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசைப் பார்த்து என்ன கேட்கும்?
எங்கள் தீர்மானத்தை நிறைவேற்றியாயிற்றா என்றா கேட்கும். இல்லவே இல்லை.
இந்த உண்மை தமிழ் மக்களைத் தவிர இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் நன்கு தெரியும்.