திட்டமிடப்பட்ட சமூக மற்றும் அரசியல் ஓரங்கட்டுதலுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் சிறுபான்மை மக்களை பாதுகாப்பதற்கான உடனடியான, மிக முக்கியமான வேலைத்திட்டங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என சிறுபான்மை மக்கள் தொடர்பில் ஆராயும் ஐ.நா. சபையின் விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடரின் நேற்றைய (புதன்கிழமை) அமர்வில், இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், வடக்கு- கிழக்கிலிருந்து ராணுவத்தை அகற்றுதல், காணாமல் போனோர் விவகாரம், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விவகாரம் என்பன தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நேற்றைய அமர்வின் போது ரீட்டா வலியுறுத்தினார்.
அதன்படி எந்தவொரு சமூகத்திற்கும் அநீதி ஏற்படாத வகையில் சமத்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கை தொடர்பில் ரீட்டா ஐசாக் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் சிறுபான்மையின மக்கள் யுத்தத்தின் பின்னரும் பாரிய சவால்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர் என சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.