கவுனவத்தை வைரவர் ஆலயத்தில் மிருக பலியிடுதலுக்கான தடையை நீடித்துள்ள யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், தடையை மீறி ஆலய சூழலில் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினால் நிர்வாக சபையினர், ஆலய பூசகர் ஆகியோர் இரண்டு வருடத்திற்கு குறையாத சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
கவுனவத்தை வைரவர் ஆலயத்தில் வேள்வி உற்சவத்தின்போது மிருகங்கள் பலியிடப்படுவது தொடர்பிலான வழக்கு நேற்று (புதன்கிழமை) யாழ்.மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி இவ் உத்தரவை பிறப்பித்தார்.
தடையை மீறி செயற்பட்டால் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆலயம் மூடப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.
ஆலய வேள்வி உற்சவத்தின் போது ஆடுகள் மற்றும் கோழிகளை ஆலயத்திற்கு கொண்டு வந்து பூஜை வழிபாடுகளை செய்வதற்கு தடையில்லை என தெரிவித்த நீதிபதி இளஞ்செழியன், ஆனால் அவ்வாறு கொண்டுவரப்படும் ஆடுகளையும் கோழிகளையும் பலியிடுவதற்கு முயற்சித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.