யாழ். நீதிமன்ற நீதிபதியாக மட்டக்களப்பில் சட்டத்தரணியாக கடமையாற்றிய ராமநாதன் கண்ணன் நியமிக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டமை கண்டனத்திற்கு உரிய விடயம் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அவர் இன்று (புதன்கிழமை) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நியமனம் சரியான சிபாரிசுகளுடன் தான் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என தான் நம்புவதாகவும் இப்படியான ஒரு நியமனத்தை எவ்வாறு பதவி நீக்கம் செய்ய முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.
குறித்த பதவி நீக்கமானது, தேசிய அரசாங்கத்திற்கும் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக அமைந்து விடும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
சட்டத்தரணி ராமநாதன் கண்ணன் யாழ். நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த பதவிக்கு நிகரான வேறு இரு பதவியை வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.