சிரியாவில் கடந்த 6 வருடங்களாக இடம்பெற்றுவரும் தீவிர உள்நாட்டு போரில், இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 5 மில்லியன் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், 13 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் அவசர உதவியை நாடியுள்ளதாகவும், குறைந்தது 8 லட்சம் பேர் ஐரோப்பாவுக்கு அகதிகளாக விண்ணப்பித்துள்ளதாகவும் மேற்குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகளில் மூன்றில் ஒரு பங்கினர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரிவித்துள்ள குறித்த அமைப்பு, கடந்த ஆண்டு குழந்தைகளுக்கு மோசமான ஆண்டு எனவும் இந்த ஆண்டில் மட்டும் குறைந்தது 650 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதேபோல், கடந்த ஆண்டு 300க்கு மேற்பட்ட மருத்துவமனைகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 1 மில்லியன் பொதுமக்கள், எவ்வித உதவியுமின்றி கிளர்ச்சியாளர்களின் முற்றுகையிடப்பட்ட பகுதிக்குள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
சிரிய உள்நாட்டு போருக்கு முன்னதாக, சிரியாவின் சனத்தொகை 22 மில்லியன் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
கடந்த 6 வருடங்களுக்கு முன்பு, சிரிய ஜனாதிபதி பஷர் அல் ஆசாதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிளர்ச்சியார்களால் முன்னெடுக்கப்பட்ட சண்டை, பின்னர் உள்நாட்டு போராக உருவெடுத்தது. இதனையடுத்து வலுப்பெற்ற கிளர்ச்சிக்குழு, இன்று பெரும்பாலான நாடுகளை ஆட்டிப்படைக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற அமைப்பை உருவாக்கி சிரியாவின் கணிசமான பகுதிகளை கைப்பற்றி தனி நாடு அமைத்து ஆட்சி நடத்தியது.
அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்த குறித்த அமைப்பின் பிடியில் சிக்கியுள்ள நகரங்களையும் பொதுமக்களையும் மீட்பதற்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் ராணுவ உதவியுடன் சிரிய ராணுவம் போர் தொடுத்து வருகின்றது.