முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய இரசிய சித்திரவதை முகாம் ஒன்றை நடத்தியிருந்ததாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மீன் சூகா தெரிவித்துள்ளார்.
வன்னி கட்டளைத்தளபதியாக ஜகத் ஜயசூரிய கடமையாற்றிய காலத்தில், 2007ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்த முகாம் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையில், இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் நிறைவுப் பகுதியில் இந்த சித்திரவதை முகாம் நடத்தப்பட்டு வந்துள்ளது.
ஜோசப் முகாம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த இந்த முகாமில், மிகவும் கொடூரமான முறையில், கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், நாளாந்தம் குறித்த முகாமில் இடம்பெற்று வந்த சித்திரவதைகளை தாம் அறிந்திருக்கவில்லை என முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவிக்கமுடியாது.
மேலும், சித்திரவதைக்குள்ளான கைதிகளின் அவலக்குரலை ஜெனரல் ஜகத் ஜயசூரிய கேட்காமல் இருக்க வாய்ப்பில்லை என யஸ்மீன் சூகா மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய பிரேஸிலுக்கான இலங்கை தூதுவராக தற்போது கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.