ஐந்தாயிரம் கடிதங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா பிரதான தபாலகத்தில் இருந்து கடந்த திங்கள் கிழமை முதல் ஐந்து நாட்களில் ஐந்தாயிரம் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பிரதான தபால் நிலைய தபால் மேற்பார்வையாளர் எஸ்.விக்ரர்போல் தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசாங்கத்தை பொறுப்பு கூற வலியுறுத்தியும், அவர்களுக்கு நடந்தது என்ன என்பதை தெரிவிக்க கோரியும் நாள் ஒன்றுக்கு ஆயிரம் கடிதங்கள் வீதம் ஐந்தாவது நாளாக இன்று ஐந்தாயிரம் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வவுனியா பிரதான தபால் நிலைய மேற்பார்வையாளர் அவர்களிடம் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,
வவுனியா தபால் நிலையத்தில் இதுவரை காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்களால் 10 ரூபாய் முத்திரைகள் ஒட்டப்பட்டு கடிதங்கள் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றது.
இதுவரை ஐந்தாயிரம் கடிதங்கள் அவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை எம்மால் பொறுப்பேற்கப்பட்டு அன்றன்றே கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அது இரண்டாம் நாள் அவர்களிடம் சென்று அடைந்து விடும் என உறுதியாக நம்புகின்றோம். தடையின்றி எமது தபால் விநியோகப் பணிகள் நடைபெறுகிறது எனத் தெரிவித்தார்.
தாயகப்பிரதேசத்தில் கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை என்ன…? என்னும் தலைப்பில் ஜனாதிபதிக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் கடிதங்கள் அனுப்புவதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இதுவரை 8 ஆயிரத்து 200 கடிதங்கள் கிடைத்துள்ள நிலையில், வவுனியா பிரதான தபால் நிலையம் ஊடாக நாள் ஒன்றுக்கு ஆயிரமட வீதம் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
இதில், பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களும் அரசாங்கத்திடம் நீதி கேட்டு கடிதங்களை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.