போருக்குப் பின்னரான நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுதல் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பின்றி, தமது திட்டத்திற்கேற்ப உள்ளக விசாரணையே முன்னெடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை ஈடுபடுத்துவது தொடர்பான விடயத்தில் கூட்டமைப்பு திட்டவட்டமாக உள்ளது. எனவே இதில் எந்த விட்டுக் கொடுப்பையும் மேற்கொள்ள நாம் தயாராக இல்லை.
மேலும், போர்க்குற்ற விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை ஈடுபடுத்துவதற்கு அரசமைப்பில் இடமில்லை என வெளிவிகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர் கூறுவது போன்று தற்போதைய அரசமைப்பில் எவ்வித தடையும் இல்லை. அவ்வாறு தடைகள் இருப்பின், அதனை நீக்கி அரசமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.