தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும், தன்னை மிரட்டினாலும் ஆர்.கே.நகரில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்றும் தீபா கூறியுள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு நடந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு 5 மணி நேரம் தாமதமாக தீபா வந்ததால் தொண்டர்கள் அதிருப்தியடைந்தனர். போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் ஏப்ரல் 12 ம் தேதி நடைபெற உள்ளது. அதிமுகவின் இரு அணிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேமுதிக, திமுக வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
ஆலோசனைக்கூட்டம்
ஆர்கே நகர் தொகுதி புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தீபா தலைமையில் பேரவை நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 3 மணிக்கு தீபா வருவார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் 5 மணிநேரம் தாமதமாக வந்தார். இதனால் இரவு 7.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. இதற்காக திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்ட மேடைக்கு தீபா சென்றார்.
அங்கு தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். இதை பார்த்ததும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை மேடையில் இருந்து கீழே இறக்கினர். இதனால், ஆத்திரமடைந்த தீபா ஆதரவாளர்கள், போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். அவர்களுடனும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தீபா பேச்சு
இதனைத் தொடர்ந்து ஆலோசனை கூட்டத்தில் தீபா பேசியதாவது: இந்த தொகுதி ஜெயலலிதாவின் தொகுதி. அந்த தொகுதி மக்களுக்கு, ஜெயலலிதா என்ன செய்ய நினைத்தாரோ அதை நான் செய்ய காத்திருக்கிறேன்.
போட்டியிடுவது உறுதி
அதற்காகவே இந்த தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். எனக்கு ஏராளமான மிரட்டல்கள் வந்து கொண்டு இருக்கிறது. அதற்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன். மக்கள் பணி செய்ய முடிவு செய்து விட்டேன். எனவே ஆர்கே நகர் தொகுதியில் நான் போட்டியிடுவது உறுதி. இதை யாராலும் மாற்ற முடியாது. எனவே, எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.