இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நேற்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கியது.
டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் 19 ரன்னிலும், ரென்ஷா 44 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
அதன்பின் களம் இறங்கிய ஷான் மார்ஷ் (2 ரன்), ஹேண்ட்ஸ்கோம்ப் (19 ரன்) நிலைத்து நிற்கவில்லை.
அந்த அணி 140 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து திணறியது. அதன்பின் கேப்டன் ஸ்டீவன் சுமித் – மேக்ஸ்வெல் ஜோடி சரிவில் இருந்து மீட்டது. ஸ்டீவன் சுமித் சதம் அடித்தார்.
அவருக்கு மேக்ஸ்வெல் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் ஆஸ்திரேலிய ரன் வேகம் அதிகரித்தது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன் எடுத்து இருந்தது. ஸ்டீவன்சுமித் 117 ரன்னுடனும், மேக்ஸ்வெல் 82 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள். முதல் ஓவரில் கடைசி பந்தில் மேக்ஸ்வெல் பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கினார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
சிறப்பாக விளையாடிய மேக்ஸ்வெல் டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை அடித்தார். அவர் 180 பந்தில் 100 ரன்னை தொட்டார். இதில் 9 பவுண்டரி, 2 சிக்சர் அடங்கும். 4-வது டெஸ்டில் விளையாடும் அவர் முதல் சதத்தை அடித்தார்.
சதம் அடித்த சிறிது நேரத்திலேயே மேக்ஸ்வேல் ஆட்டம் இழந்தார். அவர் 104 ரன் எடுத்தார். அவரது விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார். அப்போது ஸ்கோர் 331 ரன்னாக இருந்தது. அடுத்து சுமித்துடன் மேத்யூ வாடே ஜோடி சேர்ந்தார். சுமித் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.