அமெரிக்காவில் நடைபெற்ற அறிவியல் திறமை போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவி இந்திராணி தாஸ் சிறந்த ஆராய்ச்சிக்கான விருதையும் சுமார் ரூ.1.65 கோடி மதிப்பிலான பரிசு தொகையும் தட்டி சென்றார்.
அமெரிக்காவில், அறிவியல் மற்றும் கணித துறையில் தங்களது திறனை நிரூபிக்கும் இளம் மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் ரெஜினீரோன் அறிவியல் திறமை தேடல் விருது விழாவில் பெருமைப்படுத்தப்படுகிறார்கள்.
வெற்றி பெறும் மாணவர்களுக்கு விருது வழங்கப்படுவதுடன், பரிசு தொகையும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற அறிவியில் திறமை தேடல் போட்டியில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 1,700 பேர் கலந்து கொண்டனர். இதில், 40 மாணவர்கள் இறுதிப் பட்டியலில் இடம் பிடித்தனர்.
இந்த போட்டியின் டாப் 10 போட்டியாளர்களில் 5 பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இதில் 17 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க மாணவி இந்திராணி முதல் பரிசை தட்டி சென்றார்.
மூளையில் ஏற்படும் காயங்களால் அல்லது நரம்பு மண்டலத்தில் ஏற்படும் நோய்களால் நியூரான்கள் இறப்பதை தவிர்ப்பது குறித்து ஆராய்ச்சி செய்து தனது அறிக்கையை சமர்ப்பித்து இருந்தார்.
இதற்காக சிறந்த ஆராய்ச்சிக்கான விருதும், பரிசுதொகையான சுமார் ரூ.1.65 கோடியும் இந்திராணிக்கு கிடைத்தது. அர்ஜூன் ரமணி (ரூ.98 லட்சம்), அர்ச்சனா வெர்மா (ரூ.58 லட்சம்), பிரதிக் நாயுடு (ரூ.45லட்சம்), விருந்தா மதன்(ரூ.32 லட்சம்) ஆகிய இந்திய வம்சாவளி மாணவர்களும் பரிசுகளை வென்றனர்.