நல்லாட்சியில் தகவல் அறியும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்றப்பட்டமையானது, இலங்கை குடிமக்களின் ஜனநாயகத்திற்காக பெற்றக் கொள்ளப்பட்ட வரலாற்று வெற்றியாகும்.
இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டதன் ஊடாக சமகால சபாநாயகர் கருஜயசூரியவினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய வெற்றியாக அவரது அரசியல் வாழ்க்கையில் பதிவாகியுள்ளது.
எனினும் கடந்த ராஜபக்ச ஆட்சியின் போது தகவல் அறியும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் அது நிராகரிக்கப்பட்டது.
ராஜபக்ச அரசாங்கத்தில் இந்த சட்டமூலத்திற்காக கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, அப்போதைய எதிர்க்கட்சி உறுப்பினர் கருஜயசூரியவை தாக்குவதற்கு முயற்சித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.
“இது என்ன? இது எதற்கு? நாங்கள் இருக்கும் வரை இதனை சமர்ப்பிக்க விடமாட்டோம்” என கூறியவாறு கருஜயசூரியவை தாக்க பசில் முயற்சித்ததாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த மஹிந்த அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டு, புதிய அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்டதன் பின்னர் பசில் ராஜபக்ஷ இலங்கையை விட்டு தப்பியோடி இருந்தார்.
கடந்த ஆட்சியில் முக்கிய அமைச்சு பதவியை வகித்த பசில், பாரியளவில் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள அமெரிக்காவுக்கு தப்பி ஓடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.