அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர். இதனையடுத்து சசிகலா நியமனம் தொடர்பாக மார்ச் 20-ம் தேதிக்குள் முடிவெடுக்க உள்ளதாக தேர்தல் ஆணையமும் அறிவித்தது.
இதை தொடர்ந்து பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் 10 பேர் அடங்கிய சசிகலா ஆதரவு அணியினர் இந்திய தலைமை தேர்தல் ஆணையரை நேற்று சந்தித்து மனு அளித்தனர். அதில் சசிகலா நியமன விவகாரத்தில் அனைத்து விதிகளும் முறையாக பின்பற்றப்பட்டுள்ளன என்றும் இடைத்தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதால் பன்னீர்செல்வம் அணியினர் வைத்த கோரிக்கைகளை தற்போது பரிசீலனையில் எடுத்துக்கொள்ள கூடாது எனவும் கோரிக்கை வைத்து உள்ளனர்.
அதேசமயம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும்படி ஓபிஎஸ் அணி வலியுறுத்தியுள்ளது. ஓ.பி.எஸ். அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனனுக்கு வழங்குமாறு தேர்தல் ஆணையத்திடம் மனோஜ் பாண்டியன் இன்று மனு ஒன்றை அளித்துள்ளார். இது தொடர்பாக 23-ம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.
இந்த நிலையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக சசிகலாவிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. மார்ச் 20ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.