கட்டி இருக்கும் வேட்டி கூட சொந்தமில்லை. தழைகளும் இலைகளும் தான் ஆடைகள். மண் சட்டிகளை தலைமாட்டில் வைத்து பிச்சைக் கோலமே தங்கள் வாழ்க்கை என்பதை விவசாயிகள், டெல்லியில் ஆளும் பாஜக அரசிற்கு காட்டும் போராட்டம்தான் இது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.
டெல்லியில் உள்ள சாலையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுடைய வேட்டியை கழட்டி சாலையில் விரித்து, அதிலேயே படுத்து உருள்கிறார்கள். அரை நிர்வாணக் கோலத்தில் படுத்திருக்கும் அவர்கள் அருகில் மண் சட்டிகளை தலைமாட்டில் வைத்து அதில் சில சில்லறைகளை போட்டு பிச்சைக்காரர்கள் போல் படுத்துகிடக்கிறார்கள். பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும் இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பதற வைக்கிறது.
மற்றும் சிலர் ஆதிவாசிகளைப் போல் பச்சை இலை தழைகளை உடலில் உடுத்திக் கொண்டு தங்களின் அவலத்தை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு நிமிடத்திற்கு மேல் ஓடும் இந்த வீடியோ காட்சிகளை பார்த்தாலே நெஞ்சு பதை பதைக்கிறது. இந்த டெல்லி அரசு தமிழக விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து நடவடிக்கைகள் எடுப்பார்களா என்பது கேள்விக் குறிதான்.