சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள பேஜா என்ற பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது அங்கு வந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.6 லட்சம் நிதி உதவி வழங்குவதாக பேட்மின்டன் விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் அறிவித்துள்ளார். உயிரிழந்த 12 வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 வீதம் 12 வீரர்களின் குடும்பத்திற்கு மொத்தம் ரூ.6 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து நேற்று 27 வயதினை பூர்த்தி செய்த சாய்னா தெரிவித்ததாவது, கடந்த வாரம் மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் இழப்பு தனக்கு மிகவும் வேதனை அளித்ததாக தெரிவித்தார். நமது பாதுகாப்புக்காக அவர்களது வாழ்க்கையை துறந்த அந்த வீரர்களின் இழப்பு என்னை இருதயத்தை இலகச் செய்தது. எனவே அவ்வீரர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்யும் விதமாக ரூ.6 லட்சம் வழங்குவதாக சாய்னா தெரிவித்தார்.
நக்சலைட்டுகளின் தாக்குதலில் உயிரிழந்த 12 வீரர்களின் குடும்பத்திற்கு நடிகர் அக்ஷய் குமார் ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் நிதிஉதவி அளித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.