தமிழ்நாட்டில் கடந்த பல மாதங்களாக ‘அரசியலில்’ மிகப் பெரும் புயல் வீசிக்கொண்டிருந்ததால், பிரேக்கிங் நியூஸ்களுக்குப் பஞ்சம் இல்லாமல் இருந்தது. தற்போது அந்தப் புயல், திசை மாறி திரைத்துறை பக்கம் திரும்பியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக கமல், தனுஷ் தொடங்கி.. பாடகி சுசித்ரா, நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி வரை தொடர்ந்துகொண்டு இருக்கிறது. சினிமாவில், நடிகைகளிடம் அட்ஜஸ்மென்ட் கலாசாரம் இருப்பதாக நடிகை கஸ்தூரி கூறியதாக ஒரு செய்தி சமீபத்தில் வைரல் ஆனது. அது குறித்து விகடனுக்கு என்று பிரத்யேகமாகப் பேசினார் கஸ்தூரி.
“ஒரு நடிகையாக வாழ்வது எப்போதும் சவாலாகவே இருக்கிறது. பெண்ணாகப் பிறந்துவிட்டாலே, பல தடைகளைக் கடந்துதான் சாதிக்க வேண்டியிருக்கிறது. அதிலும், ஒரு நடிகையாக இருந்துவிட்டால், இந்த சமூகத்தில் இரண்டு விதமான சவால்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. பாலியல் சீண்டல் (Sexual Harassment), அட்ஜஸ்ட்மென்ட் என இரண்டு விதமான பிரச்னைகளுக்கு சில நடிகைகள் தள்ளப்படுவது வேதனையின் உச்சம்.
அட்ஜஸ்ட்மென்ட் என்பது இரண்டு பேரும் விரும்பி செய்கிற ஒரு டீல். அதை அந்தப் பார்வையோடுதான் பார்க்க வேண்டும். அது சம்பந்தப்பட்ட இருவரின் தனிப்பட்ட விசயம். இதில் கருத்துக்கூற நான் யார், நீங்கள் யார்? சினிமா நட்சத்திரங்களின் படுக்கையறைக் காட்சிகளை அறிந்துகொள்ளத்தான் அனைவரும் ஆர்வம் காட்டுகிறார்கள். இது அவ்வளவு ஆரோக்கியமான விஷயம் அல்ல. எல்லா நடிகைகளும் பெண் தான். அவர்களுக்கும் மனசு உண்டு. ஒரு நடிகையின் படுக்கையறை ரகசியத்தைத் தெரிந்துகொண்டுதான், நம்ம ஊரில் ரசிகர்கள் படம் பார்க்க வருகிறார்களா என்ன? அட்ஜஸ்ட்மென்ட் பண்ணாத நடிகைகள் எல்லாம் கொண்டாடப்படுகிறார்களா, என்ன? எப்போதும் ஒரு நடிகையை நடிகையாக மட்டுமே பாருங்கள்.
நான் என்னைப் பற்றி மட்டும்தான் பேச முடியும். மற்ற நடிகைகள் பற்றிப் பேச முடியாது. ஆனால், என்னைப் போன்ற பெரும்பாலான நடிகைகள்.. சினிமாவில் இருக்கும் சமரசங்களைவிட வெளி உலகத்தில் வக்கிரமான பார்வையை சகித்துகொண்டு வாழ்வது பெரும் சவாலாக இருக்கிறது. சில பணம் படைத்தவர்கள் மத்தியில், நடிகைகளை மோசமாகப் பார்க்கும் குணாதிசயம் இருப்பது வருத்தமளிக்கிறது. அப்படி சில பணம் படைத்தவர்கள் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் என்னை நெருங்க முயற்சி செய்தார்கள். அது அவர்களின் குணாதிசயம். ‘நான் அப்படிப்பட்டவள் இல்லை, என்னை மன்னிச்சிருங்க சார்’ என்று, எனது எண்ணத்தை வெளிப்படுத்த எனக்கு உரிமை உண்டு என்று நினைக்கிறேன். அப்படித்தான் நான் பதிலும் அளித்திருக்கிறேன். சினிமாவில் சில சமரசங்களைச் செய்யாததால் சில படங்களில் இருந்து நான் மாற்றப்பட்டதும் உண்மைதான். சில நெருக்கடிகளுக்கு ஆளானதும் உண்மைதான். அது தனிக் கதை.
இது திரைத்துறைக்கே உரிய பிரச்னை. ஆனால், நடிகையாக இருந்தாலும், சாதாரணப் பெண்ணாக இருந்தாலும், இந்த சமூகத்தில் பாலியல் தொந்தரவுக்கு (sexual Harassment) பெரும்பாலும் ஆளாகவேண்டி இருக்கிறது. சினிமா எல்லோரும் கவனிக்கும் ஒரு ஊடகமாக இருப்பதால், அது வெளியில் தெரிகிறது. சினிமாவைத் தாண்டி, இதுபோன்ற பாலியல் தொந்தரவுகள் பெரும்பாலும் எல்லாத்துறைகளிலும் இருக்கின்றன. ‘பாலியல் சீண்டலை’ ஏற்றுக்கொள்ளாத நடிகைகளைப் பற்றியும் சாதாரணப் பெண்ணையும் பற்றி ஆதாரமற்ற அவதூறுகளை வாரி இறைத்துவிட்டுப் புதிது புதிதாக கதை கட்டி விட்டு அசிங்கப்படுத்த முயற்சிக்கின்றனர். இதில் ஒரு அங்கம்தான் பத்திரிகையில் வரும் கிசுகிசு செய்திகள். இதுபோன்ற கற்பனை வளம் மிகுந்த கிசுகிசு செய்திகளுக்கு நான் முக்கியத்துவம் தருவதில்லை. எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் என இந்த சமூகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஒவ்வொருவரிடமும் நற்சான்றிதழ் வாங்க வேண்டிய அவசியம் எனக்கும் இல்லை, சக சினிமாக்காரர்களுக்கும் இல்லை. ஆனால், எங்களைப் பற்றி வதந்திகள் பரப்புகிறவர்களும், எழுதுகிறவர்களும் எங்களுக்கென்று உள்ள குடும்பம், குழந்தைகள், உறவினர்களின் மனநிலையையும் ஒரு முறை யோசித்துப் பார்க்க வேண்டும். இதுபோன்ற பாலியல் சீண்டலைகளைக் கடந்து ஒவ்வொரு பெண்ணும் சாதிப்பதே பெரும் சாதனையாக இருக்கிறது. இதை இந்த சமூகம் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.
கிசுகிசு விஷயங்களைத் தாண்டி, சினிமா பிரபலங்கள் பேசும் அரசியல் சார்ந்த கருத்துகள் வைரல் ஆவதை நான் முழுமையாக வரவேற்கிறேன். இதில் சோஷியல் மீடியாக்களின் பங்கு ஈடு இணையற்றது. அதன்படி கமல்ஹாசன் கூறிய கருத்தை நான் வரவேற்கிறேன். அது என்ன, சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரவேண்டாம் என்பது? பரம்பரை பரம்பரையாக ஒரே குடும்பம் மட்டும்தான் அரசியலில் நீடிக்க வேண்டுமா? நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு சினிமா பிரபலம் வந்தால், உடனே அவரைப் பற்றி தவறாக விமர்சனம் செய்து, அவரை அசிங்கப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?
தகுதி இல்லாதவர்களும், யார் என்றே அடையாளம் தெரியாதவர்களும் அரசியலுக்கு வரும்போது, மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள ஒரு சினிமா நடிகர் அல்லது பல கோடி பேர்களால் அறியப்படுகிற ஒரு சினிமா பிரபலம் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு இருக்கிறது?
தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் மாதிரி ஆளுமை படைத்த ஒரு நடிகர், அரசியல் பற்றி தனது நேர்மையான பார்வையை, மிகச் சரியாக பதிவு செய்திருக்கிறார். அவரைப்போன்று ஸ்ரீப்ரியா, அர்விந்த்சாமி, ஜி.வி.பிரகாஷ், ஆர்.ஜே.பாலாஜி, கௌதமி எனப் பல பிரபலங்கள் அரசியல் பேசுவது ஆரோக்கியமான விஷயம். ஜல்லிக்கட்டு, நெடுவாசல் என நடிகர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது இந்த சமூகத்துக்குத் தேவையான மற்றும் ஆரோக்கியமான விஷயம். அரசியலுக்கு வர சினிமாக்கார்களுக்கு தகுதி இல்லை என்றால், தற்போது அரசியலில் உள்ளவர்கள் எல்லாம் தகுதிகளோடுதான் இருக்கிறார்களா என்றுதான் கேட்கத்தோன்றுகிறது.
சினிமாவைப் பற்றி வரும் கிசுகிசுக்களை ரசித்து படிப்பதில் ஆர்வம் காட்டும் சமூகம், சமூக பிரச்னைப் பற்றி சினிமா பிரபலங்கள் கருத்து சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கும் சமுகம், அதே சினிமா பிரபலம் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்வதில் துளியும் நியாயம் இல்லை